சிகிச்சை, காப்பீடு, வீடு, உணவு... தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்புத் திட்டங்கள்- தங்கம் தென்னரசு

தூய்மைப் பணியாளர்களுக்கு சிகிச்சை, காப்பீடு, வீடு, உணவு உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
அமைச்சா் தங்கம் தென்னரசு
அமைச்சா் தங்கம் தென்னரசுகோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தூய்மைப் பணியாளர்களுக்கு காப்பீடு, உணவு, வீடு, பிள்ளைகளுக்குக் கல்வி, தொழில் உதவி என பல்வேறு சிறப்புத் திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினார்.

அப்போது அவர் கூறுகையில், தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளைக் கையாளும்போது நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமாக நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், தொழில்சார் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க தனித் திட்டம் உருவாக்கப்படும்.

தற்போது தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால், பணியாளர் நல வாரயம் வழியாக நிதியுதவி வழங்கப்படுகிறது. தற்போது, அவர்களது குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 5 லட்சத்துக்குக் காப்பீடு வழங்கப்படும். இனி, பணியின்போது தூய்மைப் பணியாளர்கள் இறந்தால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் கிடைக்கும்.

தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுய தொழில் தொடங்க, அந்த தொழிலுக்கான முதலீட்டில் 35 சதவீதம் அதிகபட்சமாக ரூ.3.5 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

தொடர்ந்து தொழில் தொடங்கி வட்டியுடன் கடன் தவணையை திருப்பிச் செலுத்தினால் அதில் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இதற்காக ஆண்டு தோறும் 10 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகளின் கல்வியை உறுதி செய்ய புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும். இதன் கீழ் கல்வி நிதி மட்டுமல்ல, விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐந்தாவது அறிவிப்பாக, நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு வரும் 3 ஆண்டுகளில் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் மூலம் வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் 30 வீடுகள் கட்டித் தரப்படும்.

கிராமத்தில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு கலைஞர் கனவு வீடு திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

ஆறாவது திட்டமாக, தூய்மைப் பணியாளர்கள், அதிகாலையில் பணியை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அவர்களுக்கு காலை உணவை சமைத்துக் கொண்டு வந்து சாப்பிடுவதில் இருக்கும் பிரச்னைக்கு தீர்வாக இலவசமாக தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

மேலும், தமிழக அரசு தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து வழங்கும். போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறும் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com