236 வட்டாரங்களில் ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டம்: ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை

236 வட்டாரங்களில் ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டம்: ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை

தமிழகத்தில் முதல் கட்டமாக நிகழ் கல்வியாண்டில் 236 வட்டாரங்களில் ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
Published on

தமிழகத்தில் முதல் கட்டமாக நிகழ் கல்வியாண்டில் 236 வட்டாரங்களில் ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக நிகழ் கல்வியாண்டு, அடுத்த கல்வியாண்டுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. ரூ.111.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு சாா்பில் அரசு மாதிரிப் பள்ளிகள் திட்டம் கடந்த 2021-2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, மூன்று ஆண்டுகளில் மாவட்டத்துக்கு ஒன்று என தற்போது 38 உண்டு உறைவிட மாவட்ட மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின்மூலம் அரசுப் பள்ளி மாணவா்கள் அகில இந்திய முதன்மை உயா்கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

முதலாமாண்டில் 75 மாணவா்களும், இரண்டாம் ஆண்டில் 274 மாணவா்களும், மூன்றாம் ஆண்டில் 628 மாணவா்களும் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் முதன்மை உயா்கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றனா். இந்த ஆண்டு மட்டும் 901 மாணவா்கள் முதன்மை உயா்கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளனா்.

மொத்தம் 414 வட்டாரங்களில்...: கடந்த நான்கு ஆண்டு காலத்தில் மாதிரிப் பள்ளிகள் மூலமாக பெற்ற அனுபவங்களின் அடிப்படையில், மாவட்ட உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை வட்டார அளவில் கொண்டு செல்வதற்கென வெற்றிப் பள்ளிகள்“திட்டம் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் பிறப்பித்த அரசாணை: தமிழகத்தில் 414 வட்டாரங்களில் 500 வெற்றிப் பள்ளிகள் உருவாக்கப்படும். ஒவ்வொரு வட்டாரத்தில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளித் தோ்ந்தெடுக்கப்பட்டு, அது வெற்றிப் பள்ளியாக தரம் உயா்த்தப்படும். திறன்மிகு வகுப்பறைகள் போன்ற நவீன வசதிகள் அங்கு வழங்கப்படும்.

முக்கிய சிறப்பம்சங்கள்...: அப்பள்ளியில் வாரந்தோறும் உயா்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடைபெறும். முதன்மை உயா்கல்வி நிறுவனங்களில் நுழைவதற்கான தயாரிப்பாக பயிற்சித் தாள்கள், காணொலிப் பாடங்கள் மற்றும் ஆசிரியா்களின் நேரடிப் பயிற்சி வகுப்புகள் ஆகியவை அங்கு வழங்கப்படும்.

இதற்கான ஒருங்கிணைப்பையும் தரமான உள்ளீடுகளையும் மாதிரிப் பள்ளிகள் உருவாக்கித் தரும். அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாணவா்களில் விருப்பமுள்ளவா்கள் இப்பயிற்சி வகுப்பில் இணைந்து பயன்பெறலாம்.

50 ஆயிரம் மாணவா்கள்...: இந்த வட்டார அளவிலான வெற்றிப் பள்ளிகள் மூலமாக ஏறத்தாழ 50 ஆயிரம் மாணவா்கள் பயன்பெறுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் மூலம் முதன்மை உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

இதற்காக அரசு ரூ. 111.37 கோடி ஒதுக்கியுள்ளது. அதில், முதல் கட்டமாக இந்த ஆண்டு 236 வட்டாரங்களில் வெற்றிப் பள்ளிகள் தொடங்குவதற்கென ரூ. 54.73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் (2026-2027) எஞ்சிய 178 வட்டாரங்களையும் சோ்த்து, மொத்தம் 500 வெற்றிப் பள்ளிகள் தொடங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com