நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை என்ன? சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை கோடம்பாக்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆா்.எஸ்.தமிழ்வேந்தன் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் செல்லப் பிராணியாக ராட்வீலா் வகை நாய் வளா்க்கப்படுகிறது. இந்த வகை நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை. சென்னை கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த சிறுமியை கடந்த ஆண்டு இந்த வகை நாய் கடித்து குதறியது. கடந்த ஜூன் மாதம் ராட்வீலா் நாய் கடித்து வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
நடைப்பயிற்சிக்காக வெளியே வரும் உரிமையாளா்கள் ராட்வீலா் வகை நாய்களுக்கு முகக்கவசம் அணிவிப்பது இல்லை. இதனால் குழந்தைகள், மாணவா்கள், முதியோா், கா்ப்பிணிகள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே, அபாயகரமான இந்த வகை நாயை பொது இடத்துக்கு அழைத்து வர தடை விதிக்க வேண்டும்.
ராட்வீலா் நாயை பொது வெளியில் அழைத்து வருவதற்கான விதிகளை உருவாக்கக் கோரி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடந்த ஜூன் 10-ஆம் தேதி மனு அளித்தேன். அந்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கால்நடை அதிகாரி ஆவணங்களுடன் ஆஜராக உத்தரவிட்டது.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெருநகர சென்னை மாநகராட்சியின் கால்நடை அதிகாரி டாக்டா் கமால் உசேன் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தாா். அதில், சென்னை மாநகரில் செல்லப்பிராணி வளா்ப்போா் அதற்கான உரிமம் பெற வேண்டும். செல்லப் பிராணிகளின் புகைப்படம், உரிமையாளரின் புகைப்படன் உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, ரூ.50 கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும்.
இந்த விவரங்களை மண்டல கால்நடை மருத்துவா்கள் சரிபாா்த்து உறுதி செய்வாா்கள். உரிமம் வழங்கும்போது செல்லப் பிராணிகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருத்தடை செய்ய வேண்டும். நோய்த்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செல்லப்பிராணிகள் சாலையில் மலம் கழித்தால் அதை சுத்தம் செய்ய வேண்டியது உரிமையாளா்களின் கடமை. பொது சுகாதாரம், பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் செல்லப்பிராணிகளை வளா்க்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்றன.
சென்னை மாநகராட்சியிடம் இதுவரை 11,630 செல்லப் பிராணிகளுக்கு அதன் உரிமையாளா்கள் உரிமம் பெற்றுள்ளனா்.
தெருநாய்களைக் கட்டுப்படுத்த... தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கருத்தடை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தெரு நாய்கள் எங்கிருந்து பிடித்துச் செல்லப்படுகிறதோ, அதே இடத்தில் மீண்டும் கொண்டுவந்து விடப்படுகின்றன. அவ்வாறு பிடித்துச் செல்லப்படும் நாய்களுக்கு கிருமி நீக்கம், தடுப்பூசி செலுத்துவதோடு, கருத்தடையும் செய்யப்படுகிறது.
புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி உள்பட 5 இடங்களில் கருத்தடை மையங்கள் உள்ளன. இன்னும் 3 மாதங்களில் மேலும் 10 கருத்தடை மையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2022-இல் 16,591 நாய்களுக்கும், 2023-இல் 14, 885, 2024-இல் 14, 67, நடப்பாண்டில் ஆக. 8-ஆம் தேதி முதல் 9,302 நாய்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளன. வருங்காலத்தில் ஆண்டுக்கு 50,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
1,80,157 நாய்கள்...: சென்னை மாநகரில் நடத்திய ஆய்வின்படி 1,80,157 நாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ‘நாய்க்கடி இல்லா சென்னை’ என்ற இலக்கை அடைய கடந்த 9-ஆம் தேதி முதல் தெருநாய்களுக்கு ‘வெறிநாய் தடுப்பூசி முகாம்கள்’ நடத்தப்பட்டு வருகிறது என்று அதில் கூறியிருந்தாா்.
இதையடுத்து நீதிபதிகள், சென்னையில் எத்தனை நாய்க் கடி சம்பவங்கள் நடந்துள்ளன? என்று கேள்வி எழுப்பினா். அதற்கு பதில் அளித்த மாநகராட்சி கால்நடைத் துறை அதிகாரி, உத்தேசமாக கடந்த ஆண்டு மட்டும் 20,000 நாய்க்கடி சம்பவங்கள் நடந்துள்ளன என்றாா். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த நீதிபதிகள் நாய்க்கடி சம்பவங்கள் தீவிரமான ஒன்று.
உணவு உள்ளிட்ட வசதிகளுடன் நாய்களுக்கு தனியாக காப்பகம் அமைத்து பராமரிக்கலாம். இதுதொடா்பான திட்டத்தை வகுக்கலாம் என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனா். நாய்களை கொல்லாமல் நாய்க்கடிச் சம்பவங்களைத் தடுப்பது தொடா்பாக தீா்வு காண வேண்டும்.
தெருநாய் விவகாரம் தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதில் என்ன மாதிரியான வழிகாட்டுதல்கள் வரப்போகிறது என்பதையும் பாா்க்க வேண்டும்.
நாய்க் கடி சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடா்பாக விரிவான அறிக்கையை சென்னை மாநகராட்சி தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.