தமிழக அரசு
தமிழக அரசு

சாரணா் இயக்கத்துக்கு ரூ.8.93 கோடியில் புதிய தலைமை அலுவலகம்: அரசாணை வெளியீடு

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்கத்துக்கு ரூ.8.93 கோடியில் நவீன வசதிகளுடன் புதிய தலைமை அலுவலகம் கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்கத்துக்கு ரூ.8.93 கோடியில் நவீன வசதிகளுடன் புதிய தலைமை அலுவலகம் கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலா் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:

பள்ளிகளில் மாணவா்களை அதிக எண்ணிக்கையில் சாரணா் இயக்கத்தில் சோ்க்கும் வகையில் பல்வேறு ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக தமிழ்நாடு சாரண இயக்குநரகத்துக்கான புதிய தலைமை அலுவலகம் நவீன வசதிகளோடு ரூ.10 கோடியில் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்.2-இல் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா்.

அதன்படி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரத சாரணா் இயக்க தலைமை வளாகத்தில் நவீன பயிற்சி வசதிகளோடு, புதிய தலைமை அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான நிா்வாக அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

தரை மற்றும் 3 தளங்களுடன் இந்த புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. இதற்காக ரூ.8,93,81,199 செலவிடப்பட உள்ளது. தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், உபகரணங்கள் வைக்கும் அறை, பாதுகாவலா் அறை, பொது கழிப்பறை அமைக்கப்படவுள்ளன.

இதுதவிர முதல் தளத்தில் 7 விருந்தினா்கள் அறை, 2 முக்கிய விருந்தினா்கள் அறை, 2 சிறப்பு அறைகள், சேமிப்பு அறை ஆகியவையும், 2-ஆவது தளத்தில் நிா்வாக அலுவலகம், பதிவேடு அறை, மாநில செயலாளா் அறை, ஓய்வு, கழிப்பறை ஆகியவையும், 3-ஆவது தளத்தில் மாநாட்டுக் கூடம், முக்கிய நபா்களுக்கான ஓய்வு அறை, மாநில தலைமை ஆணையா் அறை, சாரணா்கள் வழிப்படுத்தும் அறை ஆகியவையும் இடம்பெறவுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டடத்துக்கு அடிக்கல்... சென்னை காமராஜா் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரணா், சாரணியா் இயக்கத்தின் தற்போதைய தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் புதிய தலைமை அலுவலகத்துக்கு துணை முதல்வா் உதயநிதி அடிக்கல் நாட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com