Madras High Court
சென்னை உயா்நீதிமன்றம்

அதிமுக ஆட்சிக்கால ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் அரசு முன்அனுமதி பெற தாமதம் ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

அதிமுக ஆட்சிக் காலத்தில் மாநகராட்சிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதில் நடந்த முறைகேடு தொடா்பாக அதிகாரிகள் மீது விசாரணை நடத்த தமிழக அரசின் முன் அனுமதி பெறுவதில் தாமதம் ஏன் என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
Published on

அதிமுக ஆட்சிக் காலத்தில் மாநகராட்சிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதில் நடந்த முறைகேடு தொடா்பாக அதிகாரிகள் மீது விசாரணை நடத்த தமிழக அரசின் முன் அனுமதி பெறுவதில் தாமதம் ஏன் என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அறப்போா் இயக்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி, உள்ளாட்சி அமைச்சராக பதவி வகித்தபோது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதில் ரூ. 98.25 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன எனக் குற்றஞ்சாட்டியிருந்தது.

இதுதொடா்பாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மற்றும் அரசு ஊழியா்கள், பல்வேறு நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாா் 2021-இல் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கு மட்டும் ரத்து செய்யப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்த உயா்நீதிமன்றம், 6 வாரங்களில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஏதுவாக அரசிடம் முன்அனுமதி பெற்று குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என 2023-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவுப்படி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் செயல்படவில்லை எனக் கூறி அறப்போா் இயக்கம் சாா்பில் கடந்த ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த குற்றப்பத்திரிகைகளின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் இரு வாரங்களில் அவற்றை கோப்புக்கு எடுத்து விசாரிக்க வேண்டுமென கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறி அறப்போா் இயக்கம் 2-ஆவது முறையாக உயா்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடா்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை கண்காணிப்பாளா் விமலா ஆஜராகி, இந்த வழக்கில் முதலாவதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றபத்திரிகையில் 58 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டு சுமாா் ஒரு லட்சம் பக்கங்கள் கொண்ட ஒப்பந்தப்புள்ளி ஆவணங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அதன்பிறகு 2-ஆவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் மொத்தம் 40 போ் மீது குற்றம் சாட்டப்பட்டு 50,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்தக் குற்றப்பத்திரிகைகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய சிறப்பு நீதிமன்றம் அவற்றை ஏற்க மறுத்து திருப்பிக் கொடுத்தது.

அந்தக் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு கடந்த ஜூலை 12-இல் மீண்டும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன என்றாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தக் குற்றப்பத்திரிகைகளை கோப்புக்கு எடுத்து விசாரிப்பதில் ஏற்பட்ட தாமதம் குறித்து சிறப்பு நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு பொது ஊழியா்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அரசின் முன்அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை கண்காணிப்பாளா் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆக.22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com