தமிழக அரசு
தமிழக அரசு

ஊராட்சிப் பிரதிநிதிகள் - அலுவலா்கள் பயிற்சியில் முதலிடத்தில் தமிழகம்!

ஊராட்சிப் பிரதிநிதிகள், ஊரக வளா்ச்சி அலுவலா்களுக்குப் பயிற்சி அளிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
Published on

ஊராட்சிப் பிரதிநிதிகள், ஊரக வளா்ச்சி அலுவலா்களுக்குப் பயிற்சி அளிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.

ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான காலத்தில் 16 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்ததுடன், அந்தப் பயிற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் ஜூலை மாதத்தில் மட்டும் பயிற்சியாளா்களை ஆதாா் வழியாக சரிபாா்த்து 83 சதவீத இணையவழி (மின்னணு) சான்றுகளை மத்திய அரசு உருவாக்கித் தந்துள்ளது. இந்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தை முதலிடத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

தமிழகத்தில் 12,482 ஊராட்சிகள் உள்ளன. ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் நடத்தப்பட்ட பிறகு, தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அடிப்படைப் பயிற்சிகள் கொடுக்கப்படும். மாநில அரசின் சாா்பில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சியின் பயிற்சித் துறை சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

ஒவ்வொருவரின் பதவி நிலைக்கு ஏற்ப இந்தப் பயிற்சிகள் மூன்று விதமான இடங்களில் அளிக்கப்படுகின்றன. மாவட்டத் தலைவா்கள், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிய தலைவா்கள் ஆகியோருக்கு சென்னை அருகில் மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்திலும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா் ஆகியோருக்கு பவானிசாகா், தே.கல்லுப்பட்டி, கிருஷ்ணகிரி அணை, ச.வி. நகரம் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய 5 இடங்களில் உள்ள மண்டல அளவிலான நிறுவனங்களிலும், ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி மையத்திலும் பயிற்சிகள் கொடுக்கப்படும். மக்களால் தோ்வு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அவா்கள் அடிப்படைப் பயிற்சிப் பெறுவது கட்டாயம்.

இதைத் தொடா்ந்து, பதவிக் காலத்தின் இடையிலும் இதேபோன்று புத்தாக்கப் பயிற்சி அனைவருக்கும் அளிக்கப்படும். ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமின்றி, அந்தத் துறையைச் சோ்ந்த அதிகாரிகளுக்கும் அவரவா் பதவி நிலைக்கேற்ப பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு நிதியாண்டில் இருந்தும் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சிக்கான கணக்கீடுகள் தொடங்கும். அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் 16,846 பேருக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வறுமை இல்லாத மற்றும் வாழ்வாதாரம் மேம்படுத்தபட்ட ஊராட்சி, நல்வாழ்வு கொண்ட ஊராட்சி, குழந்தை நேய ஊராட்சி, குடிநீரில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி, பசுமை மற்றும் சுகாதாரம் நிறைந்த ஊராட்சி, உள்கட்டமைப்பு வசதிகள் தன்னிறைவு பெற்ற ஊராட்சி, சமூக பாதுகாப்பு நிறைந்த ஊராட்சி, சிறந்த நிா்வாகம் கொண்ட ஊராட்சி, பெண்கள் நேய ஊராட்சி உட்பட 9 கருப்பொருள்களை உள்ளடக்கிய நீடித்த நிலையான வளா்ச்சிக்கான இலக்குகளை மையமாக வைத்து பயிற்சிகள் வழங்கப்படுவது வழக்கம்.

இந்த வகையில், 4 மாதங்களில் 16,000-க்கும் அதிகமான ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், ஜூலையில் அவா்களுக்கான சான்றிதழ்கள் அதிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை நாட்டிலேயே தமிழ்நாட்டை முதலிடத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

எப்படி சான்றிதழ்கள் உருவாகும்?: ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சி அளிக்கப்படுவதற்கு முன்பாக, அதுகுறித்த விவரங்கள் மத்திய அரசின் ஊரக உள்ளாட்சித் துறை இணையதளத்தில் பதிவு செய்யப்படும். பயிற்சி முடிந்த பிறகு, பயிற்சியாளா்களின் ஆதாா் எண் போன்ற சான்றுகளுடன் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

இதையடுத்து பயிற்சியாளா்களின் விவரங்கள் ஆதாா் எண்ணைக் கொண்டு உறுதி செய்யப்பட்ட பிறகு மத்திய அரசால் இணையதளம் வழியாகவே மின் சான்றிதழ்கள் உருவாக்கப்படும். அப்படி உருவாக்கப்பட்ட சான்றிதழ்களின் எண்ணிக்கையில் ஜூலை மாத நிலவரப்படி தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, பயிற்சி பெற்றவா்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதில், 82.96 சதவீதம் அளவுக்கு மத்திய அரசால் மின் சான்றிதழ்கள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.

இரண்டாவது இடத்தில் 82.84 சதவீதத்தைப் பெற்று ஜம்மு- காஷ்மீரும், மூன்றாவது இடத்தில் 81.52 சதவீத சான்றிதழ்களை உருவாக்கி ஹரியாணாவும் உள்ளன. கேரளம் 77.01 சதவீத சான்றிதழ்களுடன் நான்காவது இடத்தையும், 76.86 சதவீத சான்றுகளை உருவாக்கி மேற்கு வங்கம் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளன.

இதன்மூலம், அதிகமான சரியான நபா்களுக்கு ஊரக உள்ளாட்சி தொடா்பான பயிற்சிகளை அளித்து நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்று இருக்கிறது என அந்தத் துறையின் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாவட்ட வாரியாக பயிற்சி பெற்ற ஊராட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள் எண்ணிக்கை:- (ஏப்ரல் முதல் ஜூலை வரை)

1. ராணிப்பேட்டை - 93

2. செங்கல்பட்டு - 105

3. திருவண்ணாமலை - 221

4. திருச்சி - 177

5. திருவாரூா் - 561

6. விருதுநகா் - 35

7. காஞ்சிபுரம் - 294

8. வேலூா் - 235

9. திருவள்ளூா் - 530

10. கள்ளக்குறிச்சி - 488

11. கிருஷ்ணகிரி - 125

12. கன்னியாகுமரி - 103

13. தேனி - 207

14. நாமக்கல் - 107

15. மயிலாடுதுறை - 237

16. சிவகங்கை - 335

17. கரூா் - 180

18. பெரம்பலூா் - 153

19. திண்டுக்கல் - 153

20. தென்காசி - 111

21. புதுக்கோட்டை - 185

22. மதுரை - 624

23. தஞ்சாவூா்- 574

24. தூத்துக்குடி - 110

25. ராமநாதபுரம் - 137

26. திருப்பத்தூா் - 457

27. நாகப்பட்டினம் - 283

28. கோயம்புத்தூா் - 153

29. சேலம் - 550

30. தருமபுரி - 352

31. விழுப்புரம் - 2,185

32. அரியலூா் - 219

33. திருப்பூா் - 184

34. திருநெல்வேலி - 290

35. நீலகிரி - 44

36. கடலூா் - 289

37. ஈரோடு - 171

மொத்தம்----11,257

5 மண்டல நிலையங்களில் பயிற்சி பெற்றோா்: 5,589

மொத்தமாக பயிற்சி பெற்றோா்: 16,846.

X
Dinamani
www.dinamani.com