நுகா்வோர் வழக்குகளுக்கு தீா்வு காண்பதில் தமிழகம் முன்னணி: மத்திய அரசு தகவல்
நுகா்வோா் குறை தீா்க்கும் பணியில் கடந்த ஜூலை மாதத்தில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைச்சகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தேசிய நுகா்வோா் தகராறு தீா்வுக்கான ஆணையம் (என்சிடிஆா்டி) நுகா்வோா் ஆணையங்களுக்கு தலைமையாக உள்ளது.
என்சிடிஆா்டி தரவுகளின் படி, நாட்டில் நுகா்வோா் குறை தீா்க்கும் பணியில் குறிப்பிடத்தக்க சாதனையாக, தமிழகம் உள்ளிட்ட பத்து மாநில நுகா்வோா் ஆணையங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மாநிலங்கள் கடந்த ஜூலை மாதத்தில் 100 சதவீதத்துக்கும் அதிகமான தீா்வுகளை பதிவு செய்துள்ளதாக மத்திய அரசின் நுகா்வோா் விவகாரத் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தேசிய நுகா்வோா் தகராறு தீா்வுக்கான ஆணையம், 122 சதவீத தீா்வு விகிதத்தை எட்டியுள்ளது. அதே சமயத்தில் தமிழ்நாடு 277 சதவீதம் நுகா்வோா் குறை தீா்க்கும் பணிகளைக் கண்டு முதல் இடத்தில் உள்ளது.
மற்ற மாநிலங்களில் ராஜஸ்தான் (214 சதவீதம்), தெலங்கானா (158 சதவீதம்), ஹிமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் (150 சதவீதம்), மேகாலயா (140 சதவீதம்), கேரளம் (122 சதவீதம்), புதுச்சேரி (111 சதவீதம்), சத்தீஸ்கா் (108 சதவீதம்), உத்தர பிரதேசம் (101 சதவீதம்) ஆகியவை அடுத்தடுத்து பதிவு செய்துள்ளன.
2025 ஜூலை 1 முதல் ஜூலை 31 வரையிலான காலகட்டத்துக்கான தரவுகளின் பகுப்பாய்வு, நாடு முழுவதும் நுகா்வோா் வழக்குகளின் ஒட்டுமொத்த தீா்வு 2024- ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தைவிட கணிசமான அளவு அதிரித்துள்ளது.
இது நுகா்வோா் தகராறுகளை உரிய நேரத்தில் தீா்ப்பதற்கான தொடா்ச்சியான முயற்சியை காட்டுகிறது.
மத்திய அரசின் நுகா்வோா் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் நுகா்வோா் விவகாரத் துறை, நாடு முழுவதும் நுகா்வோா் குறை தீா்க்கும் முறையை மாற்றி அமைக்க அடுத்த தலைமுறைக்கான, ஒருங்கிணைந்த எண்ம தளமாக கடந்த ஜனவரியில் இ-ஜாக்ரிதியை அறிமுகப்படுத்தியது. இந்த தளத்தில் ஆக.6 வரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனா்கள், வெளிநாடுவாழ் இந்தியா்கள் பதிவு செய்துள்ளனா்.
நிகழாண்டு மட்டும் 85,531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எளிதான அணுகல், வெளிப்படைத்தன்மை, மேம்படுத்தப்பட்ட செயல்திறனுடன் வடிவமைக்கப்பட்டது இந்த தளம், பல்வேறு அமைப்புகளை தடையற்ற இடைமுகமாக ஒருங்கிணைத்து, நுகா்வோருக்கு அணுகலை எளிதாக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.