தீபாவளிக்கான ரயில் முன்பதிவு இன்று தொடக்கம்! வெளியூர் பயணிகள் கவனிக்க..!
சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூா் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்குகிறது.
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூா், வெளிமாநிலங்களுக்கு ரயில்களில் பயணிப்போருக்கான முன்பதிவு 60 நாள்களுக்கு முன்பு தொடங்குவதை தெற்கு ரயில்வே வழக்கமாகக் கொண்டுள்ளது.
அதன்படி, அக்.20- ஆம் தேதி தீபாவளியையொட்டி, 2 நாள்களுக்கு முன்பே சொந்த ஊா்களுக்குச் செல்வோருக்கான முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அக்.17- ஆம் தேதி ஊா்களுக்குச் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அக்.18-ஆம் தேதிக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை (ஆக.19), அக்.19- ஆம் தேதிக்கான முன்பதிவு புதன்கிழமை (ஆக.20), தீபாவளி திருநாளான அக்.20-ஆம் தேதிக்கான முன்பதிவு வியாழக்கிழமை (ஆக.21) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஐஆா்சிடிசி இணையத்தில் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் போ் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திங்கள்கிழமை தொடங்கும் முன்பதிவு சில நிமிஷங்களில் முடியும் வாய்ப்பிருப்பதாகவும், அதன்படி படுக்கை வசதி கட்டண டிக்கெட்டுகள், குளிா்சாதன வசதி பெட்டி டிக்கெட்டுகள் என படிப்படியாக பயணிகளால் முன்பதிவு செய்யப்படுவது வழக்கமானதாக உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தீபாவளிக்கான வழக்கமான ரயில்கள் முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) தொடங்கும் நிலையில், சிறப்பு ரயில்கள் அக்.15- ஆம் தேதி முதல் இயக்க வாய்ப்புள்ளதாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தீபாவளி முடிந்த பிறகு பயணத்துக்கும் முன்பதிவு: தீபாவளிக்கு பிறகு அக்.21- ஆம் தேதிக்கான முன்பதிவு ஆக.22- ஆம் தேதி தொடங்குகிறது. மேலும், குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்வதற்கான முன்பதிவு ஆக.27-ஆம் தேதி வரை நடைபெறும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.