தூய்மைப் பணியாளர் போராட்டம்! பணிநிரந்தரம் கூடாது என்பதுதான் சரி!

தூய்மைப் பணியாளர் போராட்டம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் விழாவில் தூய்மைப் பணியாளர் போராட்டம் குறித்து அவர் பேசினார்.

தனது பிறந்தநாள் விழாவின்போது தொல்.திருமாவளவன் பேசுகையில்,

திருமாவளவன் ஏன் அரசை எதிர்த்துப் போராடவில்லை? என்று விமர்சனங்களைக் கூறுகின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் என்ற சொல்லுக்கு இன்னொரு பொருள் குப்பைப் பொறுக்குபவர்கள் அல்லது குப்பை அள்ளுகிறவர்கள். குப்பை அள்ளுகிறவர்களை பணிநிரந்தரம் செய்து, அந்தத் தொழிலையே நீங்கள் செய்து கொண்டிருங்கள் என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

அதிலிருந்து மீள வேண்டும் என்பதுதான் நமது போராட்டம். அந்தத் தொழிலைச் செய்யக்கூடியவர்கள், தொடர்ந்து அதனைச் செய்யக் கூடாது. மலம் அள்ளுபவனே மலம் அள்ளட்டும்; சாக்கடையைச் சுத்தம் செய்பவனே சாக்கடையைச் சுத்தம் செய்யட்டும்; குப்பையை அள்ளுகிறவனே குப்பையை அள்ளட்டும் என்ற கருத்துக்குத்தான் இது (பணிநிரந்தரம்) வலுசேர்ப்பதாய் இருக்கிறது.

குப்பையை அள்ளுகிற தொழிலை குப்பை அள்ளுபவர்களே செய்ய வேண்டும் - அரசுப் பணியாளர்களாக அவர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் நமக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. சொல்லப் போனால், அதனை நாம் எதிர்க்க வேண்டும்.

காலம்காலமாக இருக்கிற மரபுசார்ந்த சிந்தனை இது, அடிமைசார்ந்த சிந்தனை இது. உலக நாடுகளெல்லாம், அறிவியல், தொழில்நுட்பம்சார்ந்த கருவிகளைக் கண்டுபிடித்து, குறிப்பிட்ட இனத்தவர்தான் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றியமைக்கின்றனர். அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டவன், அந்த வேலையைச் செய்யலாம் என்ற நிலையை ஏற்படுத்துகின்றனர். இதுதான் பிற நாடுகளில் உள்ள நிலை.

ஆனால், இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்கு என்பது ஏற்புடையதாக இருக்கும். இதை அவர்களிடம் சொன்னால், நாம் அவர்களுக்கு எதிராகப் பேசுவதாகக் கருதுவார்கள். அதனால்தான், நாமும் பணிநிரந்தரம் செய்யுங்கள் என்று சொல்ல நேர்ந்தது.

பணிநிரந்தரம் செய்யக் கூடாது என்று சொல்வதுதான் சரியான கருத்து. குப்பை அள்ளுபவர்களின் குழந்தையே குப்பையை அள்ள முடியுமா? அள்ள வேண்டுமா? தலித்துகளின் பிள்ளைகள்தான் குப்பைகளை அள்ள வேண்டுமா?

அந்த வேலையை அரசுப் பணியாக்கினால் யார் வருவார்கள்? எத்தனை பேர் குப்பை அள்ள தயாராக இருக்கிறார்கள்?

70 வயதிலும் அந்தப் பணியை செய்யக் கூடியவர் இருக்கிறார் என்றால், அவர் யார் என்று நீங்கள் பார்க்க வேண்டும். இந்தத் தலைமுறை, அந்தத் தொழிலை செய்துவிட்டுப் போகட்டும். அடுத்த தலைமுறை, அந்தத் தொழிலுக்குள் போகக் கூடாது என்பதுதானே சமூக நீதி. அதிலிருந்து அவர்களை மீட்பதுதானே சமூக நீதி.

தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இதுபோன்ற சிக்கல்கள் இல்லை. நாட்டை வல்லரசாக மாற்ற துடிப்பவர்கள், இன்னும் ரயில் நிலையங்களில் கைகளால் மலம் அள்ளுகிற தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். அவர்களை அரசு ஊழியராக்குங்கள், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் கொடுங்கள் என்று சொல்ல முடியுமா? என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com