சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவை வழக்குகள்: தமிழக, புதுவை அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு முடித்துவைக்க ஏதுவாக, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது.
Published on

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு முடித்துவைக்க ஏதுவாக, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது.

உச்சநீதிமன்றக் குழு, 3 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள 3 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகளை அடையாளம் கண்டு விரைந்து முடிக்க விதிமுறைகளை வகுத்துள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி உத்தரவுப்படி, நீதிபதி டி.பரதசக்கரவா்த்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 3 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகள் குறித்த விவரங்களை காவல் துறை, வழக்குரைஞா்கள், வழக்குத் தொடுத்தவா்கள் வழங்க அறிவுறுத்தினாா்.

இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் புதுவை அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

மேலும், சமரசம் செய்யத்தக்க வழக்குகளை அடையாளம் கண்டு சமரசம் அல்லது மாற்றுமுறையில் வழக்கை முடித்து வைக்கலாம். தகுதியான வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து காவல் துறைக்கு ஆலோசனை வழங்கப்படும். காசோலை மோசடி வழக்குகளில் சமரசம் செய்வது குறித்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்தாா்.

இதேபோல, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட இந்த வழக்கை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதிவுத் துறைக்கு உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com