அரபிக் கடலில் புயல் சின்னம்:
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

அரபிக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) முதல் 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தின் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) முதல் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தெற்கு கொங்கன்-வடக்கு கேரளம் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு-தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது கரையைக் கடக்கும்பட்சத்தில் கேரள எல்லையில் தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடலில், வடக்கு ஆந்திரம்-தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரம்-தெற்கு ஒடிஸா கடற்கரை பகுதிகளில் வலுபெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து செவ்வாய்கிழமை (ஆக.19) தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திரம் கடலோரப் பகுதிகளை கடக்கக் கூடும்.

இதனிடைய தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (ஆக.19) முதல் ஆக. 24-ஆம் தேதி வரை 6 நாள்கள் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூா் மற்றும் கூடலூா் பஜாா் ஆகிய இடங்களில் தலா 140 மி.மீ.மழை பதிவானது.

அரபிக் கடலில் புயல் சின்னம்: இதனிடையே, தெற்கு கொங்கன்-வடக்கு கேரளம் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு-தென் கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இது கரையைக் கடக்கும்பட்சத்தில் கேரள எல்லையில் தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

X
Dinamani
www.dinamani.com