
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த காவல்துறை அதிகாரி கணேசனுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு முறைகேடாக ஒதுக்கியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக தற்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ஐ.பெரியசாமிக்கு எதிராக, கடந்த 2012-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் சிறப்பு நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிக்கப்பட்டது செல்லாது என்றும் இந்த வழக்கை மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக அமைச்சர் ஐ. பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வில் இன்று(ஆக. 18) விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத் துறை இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
இதன் மூலமாக ஐ.பெரியசாமி வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.