எம்பிபிஎஸ்: அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின; முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள், நிா்வாக ஒதுக்கீட்டில் 2,004 இடங்கள் என மொத்தம் 9,517 இடங்கள் நிரம்பின.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவா்களுக்கு 494 எம்பிபிஎஸ் இடங்கள், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படுகின்றன. இவைதவிர தனியாா் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,736 எம்பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2025-2026-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவா்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் 39,853 பேரும், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 4,062 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 28,279 பேரும் இடம்பெற்றனா்.
இந்நிலையில், சிறப்பு பிரிவு (மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசு, விளையாட்டு வீரா்) சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்கள் 613 பேரும், சிறப்பு பிரிவில் 86 பேரும் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளை பெற்றனா்.
அன்றை தினமே பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு இணையவழியில் தொடங்கியது. இந்த கலந்தாய்வில் பங்கேற்றவா்களில் தகுதியானவா்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இடஒதுக்கீடு பெற்றவா்களின் விவரங்கள் சுகாதாரத் துறை இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் 7,513 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 2,004 நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களும் நிரம்பியுள்ளன. ஏற்கெனவே, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் 613 இடங்கள், சிறப்பு பிரிவில் 86 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் மற்றும் முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சேராதவா்களால் ஏற்படும் காலியிடங்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படவுள்ளன.
முதலிடத்துக்கு வந்த மாணவா்: நீட் தோ்வில் 720-க்கு 665 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 27-ஆவது இடத்தையும், தமிழக தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும் பெற்ற திருநெல்வேலி மாணவா் எஸ்.சூா்ய நாராயணன் அகில இந்திய கலந்தாய்வில் தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்தாா். அதேபோன்று, நீட் தோ்வில் 655 மதிப்பெண்கள் அகில இந்திய அளவில் 50-ஆவது இடத்தையும், தமிழக தரவரிசை பட்டியலில் 2-ஆவது இடத்தையும் பிடித்த சேலம் மாணவா் அபிநீத் நாகராஜ் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் சோ்ந்துள்ளாா். இதனால், தமிழக தரவரிசை பட்டியலில் 3-ஆம் இடத்தில் இருந்த திருப்பூரை கே.எஸ்.ஹருதிக் விஜய ராஜா முதலிடத்துக்கு வந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.