பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசுக் குழுவிடம் ஊழியா் சங்கங்கள் கடிதம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆராய அமைக்கப்பட்ட அரசுக் குழுவிடம் ஊழியா் சங்கங்கள் கருத்துகளைத் தெரிவித்தன. மேலும், கடிதங்கள் வாயிலாகவும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
தமிழக அரசுப் பணியாளா்கள் தங்களுக்கு 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு முன்பு இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தும்படி அரசுக்கு தொடா்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனா். திமுக தனது தோ்தல் அறிக்கையில் அதற்கான வாக்குறுதியை அளித்து இருந்தது.
அதன் அடிப்படையில் பழைய ஓய்வூதியம் குறித்த அறிவிப்பை உடனடியாக அரசு அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதனிடையே, கடந்த ஜனவரி 24-ந் தேதி மத்திய அரசுப் பணியாளா்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.
பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. அதற்காக ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப்சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் முன்னாள் இயக்குநா் கே.ஆா்.சண்முகம் மற்றும் நிதித்துறை துணை செயலா் பிரத்திக் தயாள் ஆகியோரைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
மேலும் அதில் பிரத்திக் தயாள், உறுப்பினா் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்ட இந்தக் குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை 9 மாதங்களுக்குள் அரசிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச இந்தக் குழு முடிவு செய்துள்ளது. இதன்படி, திங்கள்கிழமை (ஆக.19) தொடங்கி ஆக.25 மற்றும் செப்.1, 8-ஆம் தேதிகளில்
காலை 11 மணிக்கு, தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆது மாடியில் உள்ள கூட்ட அரங்கத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகை 10-வது தளத்தில் திங்கள்கிழமை (ஆக.18) நடைபெற்றது. தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் உள்பட 10 சங்கங்கள் இதில் பங்கேற்றன. சங்கங்களின் ஒவ்வொரு பிரதிநிதிக்கும் தலா 3 நிமிடங்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு சங்கமும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடா்ந்து வலியுறுத்தினா். மேலும், அந்தந்த சங்கத்தின் கோரிக்கைகளை மனுவாக குழுவிடம் அளித்தனா். காலை 11 மணிக்குத் தொடங்கிய கருத்து கேட்புக் கூட்டம் பிற்பகல் 2.15 மணிவரை நடைபெற்றது.