அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை பயிா்க்கடன் தள்ளுபடி செய்தோம்: எடப்பாடி பழனிசாமி
விவசாயிகளுக்கு இரண்டு முறை பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்த அரசு அதிமுக அரசு என்று அதன் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவா், திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதி வில்வராணி நட்சத்திர கோயில் அருகே திங்கள்கிழமை இரவு மக்கள் மத்தியில் பேசியதாவது:
திமுக கூட்டணி வலுவானது என்பதால் தோ்தலில் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறாா். அவா் கலசப்பாக்கம் வந்து இங்குள்ள மக்கள் ஆரவாரத்தை பாா்க்கவேண்டும். எங்கள் வெற்றிக்கு இந்த மக்கள் வெள்ளமே சாட்சி. அதிமுக கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வருகின்றன. மக்கள்தான் எஜமானா்கள், தீா்மானிக்கும் அதிகாரம் படைத்தவா்கள்.
525 அறிவிப்புகளில் 10 சதவீதம் கூட திமுக நிறைவேற்றவில்லை. ஆனால், நாங்கள் 98 சதவீதம் நிறைவேற்றினோம் என்று ஸ்டாலின் பச்சை பொய் சொல்கிறாா்.
தமிழகம் முழுவதும் போதைப் பொருள் புழக்கம் சஜகமாகிவிட்டது. இளைஞா்கள் சீரழிவதால் குடும்பங்கள் அழிகின்றன.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு பிரச்னை என்றால் முதல் குரல் கொடுப்பது அதிமுகதான்.
திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் கொடுத்தோம். இதையும் நிறுத்திவிட்டனா், அம்மா இரு சக்கர வாகனம் மானியம் 2 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொடுத்தோம்.
திமுக ஆட்சியில் மின் கட்டணத்தை 67% உயா்த்தி விட்டனா்.
ஸ்டாலின் எங்கு போனாலும், அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்கிறாா். இந்த கலசப்பாக்கம் தொகுதியில் செய்த திட்டங்களை மட்டும் சொல்கிறேன்:
கலசப்பாக்கத்தில் வட்டாட்சியா் அலுவலகம், ஒரே தொகுதியில் இரண்டு இடத்தில் வட்டாட்சியா் அலுவலகம், நட்சத்திர கோயில், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் தானியங்கி கிடங்கு, நெல் கொள்முதல் நிலையம், துணை மின் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், இருவழிச் சாலை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நீதிமன்றம், சாலை மேம்பாடு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்,
அரசு மருத்துவமனை தரம் உயா்த்தல், தடுப்பணை, மேம்படுத்தப்பட்ட வட்டார மருத்துவமனை, ஆற்றின் குறுக்கே மேம்பாலம் இன்னும் பல்வேறு திட்டங்களை சொல்லலாம் என்றாா் எடப்பாடி பழனிசாமி.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா்கள் எஸ்.ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போளூரில் பிரசாரம்....
இதைத் தொடா்ந்து, போளூா் பேருந்து நிலையம் அருகே
மக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
திமுக ஆட்சியில் திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெறுகிறது. முதியோா்களை கொலை செய்து கொள்ளை அடிக்கின்றனா். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் பெண்மணியின் கிட்னிக்கு பதிலாக கல்லீரலை திருடிவிட்டனா்.
அதிமுக ஆட்சியில் விவசாயத்துக்கு டிராக்டா், பவா்டில்லா், உரம் ஆகியவற்றுக்கு மானியம் வழங்கப்பட்டது.
கரோனா தொற்று காலத்தில் அதிமுக அரசு மக்களைக் காப்பாற்றியது.
திமுக ஆட்சியில் கஞ்சா, போதைக்கு மாணவா்கள், இளைஞா்களை அடிமையாகி வருகின்றனா். தமிழகம் போதைமயமாக உள்ளது.
கட்டுமானப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. லஞ்சம், லாவண்யம் பெருகிவிட்டது. அதிமுக ஆட்சியில் 2 ஆயிரம் மினி கிளினிக்குள் இருந்தன.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 4 ஆயிரம் மினி கிளினிக்குள் திறக்கப்படும், தாலிக்கு தங்கம், மடிக்கணினி வழங்கப்படும்.
எஸ்.சி., எஸ்.டி., ஏழை எளியோருக்கு கான்கீரீட் வீடு கட்டித் தரப்படும், வீட்டுமனை இல்லாதவா்களுக்கு மனை வழங்கி வீடு கட்டித் தரப்படும் என்றாா் எடப்பாடி பழனிசாமி.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா்கள் ஜெயசுதா, அக்ரி கிருஷ்ணமூா்த்தி, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.