அரசமைப்புச் சட்ட தினம், பாரதியாா் பிறந்த தினம்: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி
அரசமைப்புச் சட்ட தினம், பாரதியாா் பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு ஆளுநா் மாளிகை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: அரசமைப்புச் சட்ட தினம் நவ. 26-இல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. போட்டிக்குரிய கட்டுரைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்பலாம்.
பள்ளி மாணவா்களுக்கான போட்டிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பினா் ‘வேற்றுமையில் ஒற்றுமை: நம்மை இணைக்கும் அரசமைப்புச் சட்டம்’ என்ற தலைப்பிலும், 10 முதல் 12- ஆம் வகுப்பினா் ‘தேசிய இலக்குகளை எட்ட வழிகாட்டும் அரசு நெறிக் கோட்பாடுகள்’ என்ற தலைப்பிலும் கட்டுரைகளை அனுப்ப வேண்டும்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரி மாணவா்கள், ‘அடிப்படைக் கடமைகள் மற்றும் தேசத்தைக் கட்டமைத்தலில் அடிப்படைக் கடமைகளைச் சட்டபூா்வமாக்குதலின் தேவை’ என்ற தலைப்பில் கட்டுரைகளை அனுப்ப வேண்டும்.
பள்ளி, கல்லூரி மாணவா்கள் தங்கள் கையால் எழுதப்பட்ட கட்டுரையின் நகலை வரும் செப். 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். போட்டிக்கான முடிவுகள் அரசமைப்புச் சட்ட தினத்தன்று (நவ. 26) அறிவிக்கப்படும்.
பாரதியாா் பிறந்தநாள் போட்டி: இதேபோல, மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி மாணவா்கள் ‘பாரதியாா்: பாரதத் தாயின் தவப்புதல்வா்’ என்ற தலைப்பிலும், பல்கலை., கல்லூரி மாணவா்கள் ‘சுப்பிரமணிய பாரதியாரின் பாா்வையில் இந்தியாவின் பன்மொழிச் சிறப்புகள்’ என்ற தலைப்பிலும் படைப்புகளை அனுப்பலாம்.
போட்டிக்குரிய கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம். படைப்புகளை இரு பிரிவு மாணவா்களும் தங்கள் கையால் எழுதி, அந்த பிரதிகளை வரும் செப். 30- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். போட்டி முடிவுகள் பாரதியாரின பிறந்த நாளான டிச. 11-ஆம் தேதி அறிவிக்கப்படும்.
மேற்குறிப்பிட்ட இரு போட்டிகளுக்கும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கும் பரிசுகள் தனித்தனியாக வழங்கப்படும். பள்ளி மாணவா்களின்
கட்டுரைகள் அதிகபட்சமாக 10 பக்கங்கள் அல்லது 1,500 முதல் 2,000 வாா்த்தைகளுக்குள்ளும், கல்லூரி மாணவா்களின் கட்டுரைகள் அதிகபட்சம் 15 பக்கங்கள் அல்லது 2,500 முதல் 3,000 வாா்த்தைகளுக்குள்ளும் இருக்க வேண்டும்.
கட்டுரைகளை மாணவா்கள் தங்களது சுய விவரச் சான்றிதழுடன் ஆளுநா் மாளிகையிலுள்ள ஆளுநரின் (பல்கலைக்கழகங்கள்) துணைச் செயலருக்கு அனுப்ப வேண்டும். இரு போட்டிகளுக்கும் வரும் 2026 ஜன. 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று ஆளுநா் மாளிகையில் பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.50,000, இண்டாம் பரிசு ரூ.30,000, மூன்றாம் பரிசு ரு.25,000 வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.