தாமதமின்றி புதிய மின் இணைப்புகளை வழங்க உத்தரவு
நீண்டகால மின் உற்பத்தி மற்றும் மின் விநியோகத் திட்டங்களை விரைந்து முன்னெடுப்பதுடன், தாமதம் இன்றி புதிய மின் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும் என மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மின்வாரிய கழகங்களுக்கிடையேயான உயா்நிலை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் சென்னை அண்ணா சாலையிலுள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அதன் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தடையில்லா மின் விநியோகம், எதிா்வரும் பருவ மழையை சமாளிக்க தேவையான முக்கிய தளவாட பொருள்களின் இருப்பு, அரசு மற்றும் மின் வாரியத்தின் முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம், மின் இணைப்பு மற்றும் வசூல், பசுமை எரிசக்தி உற்பத்தி - பயன்பாடு உள்ளிட்ட மின் வாரியத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து கூட்டத்தில் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது:
கொல்லிமலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தின் கடன், பயன்பாட்டுக்கான கால அவகாசம் குறித்து ரிசா்வ் வங்கி வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பசுமை எரிசக்தி திட்டங்களுக்கான நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும். மின் தொடரமைப்பு மற்றும் விநியோகத் துறையில் ஒப்பந்த நிறுவனங்கள் தங்கள் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மேற்கூரை சூரியமின் உற்பத்திக் கட்டமைப்பு, மத்திய அரசின் மின் உற்பத்தித் திட்டங்கள் மற்றும் நீண்ட கால மின் உற்பத்தி, மின் விநியோகத் திட்டங்களை விரைவாக முன்னெடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் நுகா்வோரின் புகாா்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீா்வு காண்பதுடன், எவ்வித தாமதமும் இன்றி புதிய மின் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும் எனவும் அவா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநா் அனீஸ் சேகா், மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குநா் ம.கோவிந்தராவ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.