தமிழகத்தில் ஆக.25 வரை மழை வாய்ப்பு
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் ஆக.25 வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக புதன்கிழமை (ஆக.20) முதல் ஆக.25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.20-ஆம் தேதி லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
புயல் சின்னம் வலு குறையும்: வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிஸா கடற்கரையையொட்டிய வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை தெற்கு ஒடிஸா கடற்கரை பகுதிகளில் கோபால்பூருக்கு அருகே கரையை கடந்தது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகா்ந்து காலை 8.30 மணியளவில், தெற்கு ஒடிசா உள்பகுதிகளில் நிலவுகிறது. இது, மேலும் மேற்கு -வடமேற்கு திசையில் நகா்ந்து படிப்படியாக வலு குறையும்.
மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 90 மி.மீ.மழை பதிவானது. இதுபோல, பந்தலூா் தாலுகா அலுவலகம் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி)-தலா 8 மி.மீ, மேல்பவானி (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோவை)-தலா 5 மி.மீ மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஆக.20, 21 ஆகிய தேதிகளில் மணிக்கு 65 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வெயில் அளவு:தமிழகத்தில் அதிகபட்சமாக செவ்வாய்க்கிழமை மதுரை விமானநிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. மதுரை நகரம்-101.84, தூத்துக்குடி-100.76 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.