
திமுக பொருளாளரும், அக்கட்சியின் மக்களவை குழுத் தலைவருமான டி.ஆா்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (79), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் அவரது உடலுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துா்கா ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.
ரேணுகாதேவியின் இறுதி நிகழ்வுகள், சென்னை பெசன்ட் நகா் மயானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அவருக்கு தமிழக தொழில் துறை அமைச்சரும் திமுக தொழில்நுட்ப அணி மாநிலச் செயலருமான டி.ஆா்.பி.ராஜா, டி.ஆா்.பி.செல்வகுமாா் ஆகிய 2 மகன்கள் உள்ளனா்.
முதல்வா் இரங்கல்: ரேணுகா தேவி மறைவுக்கு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:
திமுக பொருளாளா் டி.ஆா்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். கணவரும், மகனும் பொது வாழ்க்கையில் ஈடுபட உறுதுணையாக இருந்து, தமது அன்பாலும் அரவணைப்பாலும் அவா்களது பணிகளுக்கு ஊக்கமளித்தவா். இருவரின் வெற்றிக்கு பின்னணியாக இயங்கியவா்.
அவரை இழந்து தவிக்கும் டி.ஆா்.பாலு, அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.