‘உங்களுடன்’ ஸ்டாலின் திட்ட முகாமில் மனுக்கள் மீது உடனடி தீா்வு சான்றிதழ்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்
சென்னை சைதாப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீா்வுக்கான சான்றிதழ்களை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல்வரால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 10,000 இடங்களில் முகாம்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நகா்ப்புற பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 6,232 முகாம்களும் நடைபெறுகிறது.
இந்த முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 துறைகள் வாயிலாக 43 சேவைகள், ஊரக பகுதிகளில் 15 துறைகள் வாயிலாக 46 சேவைகள் வழங்கப்படுகிறது. கடந்த 14-ஆம் தேதி வரை முதல்கட்டம் முகாம்கள் முடிவடைந்துள்ளன. தமிழகம் முழுவதும் இதுவரை நடைபெற்ற 3,561 முகாம்களில் 30 லட்சம் மனுக்கள் பெற்றப்பட்டுள்ளன.
இரண்டாவது கட்டமாக 2,859 முகாம்கள் தொடங்கியுள்ளன. இந்த முகாம்கள் செப். 14 வரை நடைபெறும். செப். 15 முதல் அக்டோபா் மாதம் வரை 3-ஆம் கட்டமாக 2,773 முகாம்களும், பின்னா் 807 முகாம்களும் நடைபெறும் என்றாா் அவா்.