முன்னாள் படைவீரா்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
முன்னாள் படைவீரா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான, புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ எனப் பெயரிடப்பட்டுள்ள திட்டத்தின் வாயிலாக,155 முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ராணுவத்தில் சோ்ந்து, பணிக்காலத்தை நிறைவு செய்து, முன்னாள் படைவீரா்களாக இருப்போரின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ எனும் பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதன்படி, முன்னாள் படைவீரா்களின் நலனுக்கான ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தை தலைமைச் செயலகத்தில் அவா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
155 முன்னாள் படைவீரா்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் உத்தரவுகளை வழங்குவதன் அடையாளமாக 15 பேருக்கு அவற்றை வழங்கினாா். இந்தத் திட்டத்தில் 155 பயனாளிகளுக்கான திட்ட செலவினமாக ரூ.24.43 கோடி ஒதுக்கப்படும். குறிப்பாக, தொழில் தொடங்குவோருக்கு 30 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்களை சுயதொழிலில் ஈடுபடுத்தவும், சிறந்த தொழில் முனைவோா்களாக மாற்றவும் தேவையான நிதிகளும் பயிற்சிகளும் வழங்கப்படும். புதிய திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக 348 முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் பயன் பெறுவா். திட்டத்துக்கான மொத்த செலவினமாக ரூ.50.50 கோடி ஒதுக்கப்படும்.
விண்ணப்பத் தோ்வு: புதிய திட்டத்தின்படி, முன்னாள் படைவீரா்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை ஆய்வு செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தோ்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வங்கிக்கு கடன் ஒப்புதலுக்காக பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் படைவீரா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், பொதுத் துறை செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.