மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் செயல்: பதவிநீக்க மசோதா குறித்து முதல்வர்!

பதவிநீக்க மசோதா குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தது தொடர்பாக....
mk stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிடோரை பதவியில் இருந்து நீக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமரோ தொடர்ச்சியாக 30 நாள்கள்வரையில் காவலில் வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படும் மசோதா, இன்று(ஆக. 20) மக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு மத்தியில் தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

130-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல, இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கொடுஞ்சட்டம்!

30 நாள் கைது = மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை எந்த விசாரணையும், நீதிமன்றத் தண்டிப்பும் இல்லாமலேயே பதவிநீக்கம் செய்யலாம். பா.ஜ.க. வைத்ததுதான் சட்டம்!

வாக்குகளைத் திருடு, எதிராளிகளின் குரலை நசுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஒடுக்கு: எல்லா கொடுங்கோன்மையும் இப்படித்தான் தொடங்கும்!

மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் இத்தகைய திருத்தச் சட்டத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற முயலும் இந்த முயற்சிக்கு எதிராக ஜனநாயகச் சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராட முன்வர அழைக்கிறேன்.

பிரதமருக்குக் கீழான சர்வாதிகாரா நாடாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் மத்திய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் மக்களாட்சி அடித்தளத்தையும் களங்கப்படுத்த முடிவெடுத்து விட்டது.

வாக்குத் திருட்டு அம்பலப்படுத்தப்பட்ட பிறகு, மத்திய பா.ஜ.க. அரசு அமைத்துள்ள ஆட்சியே கேள்விக்குள்ளாகியுள்ளது. தற்போதைய பா.ஜ.க. அரசு சட்டப்பூர்வமானதா என்பதே ஐயமாக உள்ளது. தில்லுமுல்லுகளின் மூலம் மக்களின் தீர்ப்பைக் களவாடியுள்ள பா.ஜ.க., தற்போது அதில் இருந்து மக்களின் கவனத்தை எப்படியாவது திசைதிருப்ப முயற்சி செய்கிறது. அதற்காகத்தான், இந்த அரசியலமைப்பு (130-வது திருத்தம்) சட்டமுன்வரைவு, 2025-ஐக் கொண்டு வந்துள்ளது.

இந்தச் சட்டமுன்வரைவின் நோக்கம் மிகத் தெளிவானது. பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள தனது அரசியல் எதிரிகளின் மீது பொய் வழக்குகளைப் புனைந்து, எந்த விசாரணையும் தீர்ப்பும் இன்றியே, 30 நாள்கள் கைது செய்யப்பட்டு இருந்தாலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைப் பதவிநீக்கம் செய்யலாம் எனும் சட்டப்பிரிவுகளின்கீழ், அவர்களை ஆட்சியில் இருந்து பா.ஜ.க. அகற்றவே இது வழி செய்கிறது. குற்றம் என்பது தீர விசாரித்த பிறகே முடிவாகும், வெறுமனே வழக்கு பதிவதால் முடிவாகாது என்பதால், அரசியலமைப்புக்குப் புறம்பான இந்தச் சட்டத்திருத்தம் நிச்சயமாக நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும்.

மேலும், பல மாநிலங்களிலும் முதலமைச்சர்களாக அமைச்சர்களாக இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியில் உள்ள மாநிலக் கட்சித் தலைவர்களை, “ஒழுங்காக எங்களுடன் இருங்கள், இல்லையென்றால்…” என்று மிரட்டுவதற்கான தீய நோக்கமும் இதில் உள்ளது.

எந்தச் சர்வாதிகாரியும் முதலில் செய்வது, தனது எதிராளிகளைக் கைது செய்யவும் பதவிநீக்கவுமான அதிகாரத்தைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதுதான். அதைத்தான் இந்தச் சட்டத்திருத்தமும் செய்ய முயல்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Chief Minister Stalin has posted on his X site a bill to remove Chief Ministers and ministers from office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com