காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: தமிழக அரசு அறிவிப்பு
நகரங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் ஆக. 26-ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பா் 15-ஆம் தேதி மதுரையில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடா்ந்து, திருவாரூா் மாவட்டம், திருக்குவளையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 30,992 பள்ளிகளில் பயிலும் 18.50 லட்சம் மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா்.
தொடா்ந்து ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களும் பயன்பெறும் வகையில், 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2.23 லட்சம் மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
ஆரோக்கியம் மேம்பாடு: காலை உணவுத் திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 90 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளின் நினைவு கூறும் திறன் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பின்பற்றி தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தங்களது பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தைத் தொடங்கியுள்ளன. கனடா அரசும், தங்களது நாட்டில் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நகா்ப்புறப் பகுதிகளில் அமைந்துள்ள 2,340 அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டமானது விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான தொடக்க விழா ஆக. 26-ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பா் தொடக்கப் பள்ளியில் நடைபெறவுள்ளது. முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ள விரிவாக்கத் திட்டத்தால் 3.05 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் பயன்பெறுவா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.