தவெக மாநாட்டுத் திடலில் கடும் வெய்யில் காரணமாக தொண்டர்கள் பலர் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் டிரோன்கள் மூலமாக குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி கிராமத்தில் இன்று (ஆக.21) மாலை நடைபெற உள்ளது.
இதற்காக 506 ஏக்கரில் மாநாட்டு திடல், பார்க்கிங், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை கருதி அவசர மருத்துவ உதவிக்காக மாநாடு நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கில் மருத்துவ ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். காலை 10 மணி அளவில் மாநாட்டு பந்தலில் உள்ள அனைத்து இருக்கைகளும் நிரம்பின.
மாநாடு நடைபெறும் இடத்தில் வெய்யில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது. இதனால் தொண்டர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வெய்யில் காரணமாக தரை விரிப்புகளை கிழித்து எடுத்து தற்காலிக கூடாரம் அமைத்து ரசிகர்கள் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். சிலர் இருக்கைகளை நிழற்குடை போல் மாற்றி தலையில் பிடித்துக் கொண்டனர். பலரும் குடைகளுடன் வந்திருக்கின்றனர்.
கடும் வெய்யில் காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடும் வெப்பம் காரணமாக தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் டிரோன்கள் மூலமாகவும் குடிநீர் பாட்டில்கள் மற்றும் முதலுதவி கிட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
குழந்தைகளுடன் வர வேண்டாம் என்று கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தியும் பலரும் தங்கள் குழந்தைகளுடன் வந்து சிரமப்படுகின்றனர்.
இதையும் படிக்க | இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.