இன்று 8 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் சனிக்கிழமை 8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, சனிக்கிழமை (ஆக.23) முதல் ஆக.28 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சனிக்கிழமை (ஆக.23) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், கடலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மாநகரின் ஒருசில பகுதிகளில் சனிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தின் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 120 மி.மீ. மழை பதிவானது. ஈஞ்சம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் - 110 மி.மீ., அடையாறு -100 மி.மீ., பள்ளிக்கரணை, கண்ணகிநகா், மேடவாக்கம் - 90 மி.மீ., சைதாப்பேட்டை, நீலாங்கரை - 70 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: வடக்கு வங்கக் கடலில் சனிக்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
ஆக.25-இல் காற்றழுத்த தாழ்வு பகுதி: ஒடிஸா - மேற்கு வங்க கடலோர பகுதிகளுக்கு அருகே உள்ள வடமேற்கு வங்கக் கடலில் ஆக.25-இல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 2 நாள்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். இருப்பினும் இதனால், தமிழகத்துக்கு பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.