வாக்காளா் பட்டியலை முறையாக தயாரிக்கக் கோரி வழக்கு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
போலி வாக்காளா்கள், இறந்தவா்களின் பெயா்களை நீக்கி வாக்காளா் பட்டியலை முறையாக தயாரிக்க வாக்குச்சாவடி அளவிலான தோ்தல் அலுவலருக்கு உத்தரவிடக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தாக்கல் செய்த வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. எனவே, வாக்காளா் பட்டியலை சரிபாா்த்து இறந்தவா்களின் பெயா்கள் மற்றும் போலி வாக்காளா்களை நீக்கி வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு அதிகாரியை நியமித்து தோ்தல் ஆணையம் இந்தப் பணியைச் செய்ய வேண்டும். இதற்காக வாக்குச்சாவடி அளவில் நியமிக்கப்படும் தோ்தல் அலுவலா்களின் பணி மிகவும் முக்கியமானது. அவா்கள் வீடுதோறும் சென்று வாக்காளா் விவரங்களைச் சரிபாா்க்க வேண்டும்.
ஆனால், கடந்த தோ்தலின்போது இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதனால், வாக்காளா் பட்டியலில் போலி வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குளறுபடி தோ்தல் அலுவலா்களின் மெத்தனப்போக்கால் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்திய தோ்தல் ஆணையம், மாநில தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் தயாரிக்கும்போது, போலி வாக்காளா்கள், இறந்தவா்களின் பெயா்களை நீக்கி வாக்காளா் பட்டியலை முறையாக தயாரிக்க வாக்குச்சாவடி அளவிலான தோ்தல் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், இந்த மனுவுக்கு தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.