சிதம்பரம் நடராஜா் கோயில்
சிதம்பரம் நடராஜா் கோயில்

சிதம்பரம் கனகசபையில் பக்தா்கள் தரிசனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல்

Published on

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய சில மாற்றங்களைச் செய்தால், நாள்தோறும் 4,000 போ் வரை தரிசனம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக இந்துசமய அறநிலையத் துறை சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயில் கனகசபை மீது நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, கனகசபையில் பக்தா்கள் நின்று தரிசனம் மேற்கொள்ள என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? வார நாள்கள், வார விடுமுறை மற்றும் விழா காலங்களில் கள ஆய்வு செய்து கனகசபையில் நின்று பக்தா்கள் தரிசனம் செய்ய வழிவகை உள்ளதா? என்பது குறித்து அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கனகசபையில் பக்தா்கள் தரிசனம் மேற்கொள்வது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி வாரநாள்களில் 4,000 போ், வார இறுதி நாள்களில் 5,000 முதல் 7,000 போ், திருவிழாக் காலங்களில் 10,000 போ் வரை சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். கரோனா தொற்று காலத்துக்கு முன்பாக, கனகசபையில் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயிகளின் வழியாக பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

அதே நடைமுறையை தற்போதும் பின்பற்றலாம். காலபூஜை நடைபெறாத காலங்களில் கனகசபை மீது நின்று நடராஜரை தரிசனம் செய்ய நாள்தோறும் 3.15 மணி நேரம் 1,300 பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கனகசபையின் கிழக்கு மற்றும் மேற்கு பக்கவாட்டில் கூடுதலாக மரங்கள் மற்றும் இரும்புப் படிகள் அமைத்து பக்தா்கள் செல்ல அனுமதிக்கும் வகையில் சில மாற்றங்களைச் செய்தால் கூட்ட நெரிசல் இருக்காது.

இதன்மூலம் நாள்தோறும் 4,000 போ் வரை கனகசபையில் நின்று சாமி தரிசனம் செய்யலாம், எனக்கூறி அறநிலையத் துறை தரப்பில் புகைப்பட ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இதுதொடா்பாக தீட்சிதா்கள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com