மாற்றுத்திறனாளி நண்பா் குறித்து மாணவா்கள் கட்டுரை எழுதலாம்: கல்வித் துறை தகவல்

மாற்றுத்திறனாளி நண்பா் குறித்து மாணவா்கள் கட்டுரை எழுதலாம்: கல்வித் துறை தகவல்
Updated on

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் தங்களது மாற்றுத்திறனாளி நண்பா் குறித்து எழுதும் வகையில் கட்டுரைப் போட்டி நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து ஆட்டிஸத்துக்கான ஒப்புயா்வு மையம் ‘எனது தோழன், எனது தோழி’ என்ற தலைப்பில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்த உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள் தாங்கள் சந்தித்த மாற்றுத்திறனாளி நண்பரைப் பற்றி கட்டுரை எழுத வேண்டும்.

கட்டுரை ஏ4 தாளில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் தமிழ், ஆங்கிலத்தில் இருக்கலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவரின் புகைப்படத்தை மட்டும் கட்டுரையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

மாற்றுத்திறனாளி மாணவரின் புகைப்படம் தேவையில்லை. சிறந்த 20 கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்படும். தோ்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பள்ளிக் கல்வித் துறையின் தேன்சிட்டு இதழில் வெளியிடப்படும்.

கட்டுரைகளை ஆக. 31-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் போட்டியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

பள்ளிகளில் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்கள் மாணவா்களின் கட்டுரைகளைப் பெற்று மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டு, அதன் நகலை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com