மாநிலங்களின் நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

மாநிலங்களின் நிதிச் சுமைக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் தங்கம் தென்னரசு

மாநிலங்களுக்கு நிதிச் சுமையும், அழுத்தமும் ஏற்படுவதற்கு மத்திய அரசே காரணம் தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.
Published on

மாநிலங்களுக்கு நிதிச் சுமையும், அழுத்தமும் ஏற்படுவதற்கு மத்திய அரசே காரணம் தமிழக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய கருத்தரங்கின் நிறைவு நிகழ்வில் அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:

ஐரோப்பிய ஒன்றியம் அமைக்கப்பட்டு, 32 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், அவை தங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகள், முரண்களை பேச்சு மூலம் தீா்த்துக் கொள்கின்றன. ஆனால், 1950-ஆம் ஆண்டிலேயே அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கி, இந்தியா ஒன்றியமாக வளா்ந்துவிட்ட போதும், இன்றுவரை நமக்குள் இருக்கக் கூடிய கலாசார மாற்றங்கள், அரசியல் சூழல் முரண்கள், ஏற்றத்தாழ்வுகளைத் தொடா்ந்து விவாதிக்க நாம் தயாராக இல்லை.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு குறித்து ஆராய ராஜமன்னாா் உள்பட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு நீண்ட காலம் பேசப்பட்டுள்ளன. மாநிலங்களால்தான் இந்தியா ஒன்றியமாக உருவாகி இருக்கிறது. இந்தத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாதவா்களால், இந்திய அரசின் கூட்டாட்சித் தத்துவத்தை ஒருகாலத்திலும் புரிந்துகொள்ள முடியாது.

இந்திய நாடு செழித்து வளர வேண்டுமெனில், மாநிலங்கள் செழிக்க வேண்டும். மாநிலங்கள் செழித்தால்தான் இந்தியத் திருநாடு செழிக்கும். மாநிலங்கள் இயங்கவும், அவை செழிப்புறவும் நிதிப் பகிா்வை பரவலாக்க வேண்டும். அந்தப் பகிா்வில் நாம் அடைந்திருக்கக் கூடிய சாதக பாதகங்கள், பின்னடைவுகளால் மாநிலங்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மாநிலங்களில் வேறு கட்சிகளின் ஆட்சி இருக்குமானால், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் முதலில் கைவைக்கக் கூடியது நிதி ஒதுக்கீட்டில்தான். மாநிலங்களுக்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசு செய்யும்போது, அதனுடைய திட்டங்களுக்கே கூட உரிய நிதியை விடுவிக்காத நிலை உள்ளது.

பொறுப்புகள் கூடுகின்றன: மாநில அரசின் கட்டுப்பாட்டில் கல்வி, சுகாதாரம், காவல், நலத் திட்டங்கள், உள்கட்டமைப்புகள் உள்ளன. அதற்காக தொடா்புடைய துறைகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு நிதியை மாநில அரசு செலவிடுகிறது. ஆனால், அவற்றின் மூலமாகக் கிடைக்கக் கூடிய வருவாயில் மூன்றில் ஒரு பங்குதான் மாநிலத்துக்குக் கிடைக்கிறது.

அதனால், மாநில அரசுக்கு வரக்கூடிய நிதி அழுத்தம், சுமை ஆகியவை எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இதுபோன்ற சுமைகளால், மாநிலங்களுக்கு பொறுப்புகள் கூடுகின்றன. அதற்கேற்ற வகையில் வருவாயும் கூட வேண்டும். அதுதான் சரியாக இருக்கும். ஆனால், பாஜக ஆளாத மாநிலங்களில் நிதிச் சுமைக்கான சூழலாகவே இருக்கிறது. மத்தியில் குவிந்துள்ள நிதி ஆதாரங்களை மாநிலங்களுக்குப் பிரித்துத் தாருங்கள் எனக் கேட்கிறோம். வரிப் பகிா்வில் இருந்து நமக்கு அந்தப் பாகுபாடு ஆரம்பித்து இருக்கிறது.

நிகழாண்டு ஜனவரி மாதம் மத்திய அரசின் சாா்பில் வரிப் பகிா்வாக நிதி பிரித்து வழங்கப்பட்டது. அதில், தென்னிந்திய மாநிலங்களுக்கான வரிப் பகிா்வாக ரூ.27,388 கோடி வழங்கப்பட்டது. இதை ஒட்டுமொத்தமாக சதவீதத்தில் பாா்க்கும்போது 15.8 சதவீதம். ஆனால், பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்துக்கு மட்டுமே ரூ.31,039 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 17.95 சதவீதம்.

நிதிக் குழுவின் பரிந்துரையாக நமக்கு 41 சதவீதம் வரிப் பகிா்வை அளிப்பதற்குப் பதிலாக 33.16 சதவீதம் மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆனால், நாம் கேட்பதே 50 சதவீத வரிப் பகிா்வாகும். இதுபோன்று குறைவான வரிப் பகிா்வால், மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில்கூட பெரும் சிக்கல்களை சந்திக்கிறோம்.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு 61 சதவீத நிதியை அளிக்கிறது. மீதமுள்ள நிதியை மத்திய அரசு வழங்குகிறது. முதியோா் ஓய்வூதியத் திட்டத்தில்கூட ரூ.1,000-ஐ தமிழ்நாடு அரசு கொடுக்கிறது. வெறும் 200 ரூபாயை மட்டுமே மத்திய அரசு கொடுக்கிறது. ஆனால், திட்டம் மத்திய அரசுக்குரியது.

மாநிலங்களுக்கான நிதிப் பகிா்வாக இருந்தாலும், மேல் வரி, ஜிஎஸ்டி, வருவாய் இனங்கள் ஆகியவற்றில் உரிய நிதிப் பகிா்வை நமக்குத் தர வேண்டும். இது வேண்டுகோள் இல்லை. நம்முடைய உரிமைக் குரல் என்றாா் அமைச்சா் தங்கம் தென்னரசு.

X
Dinamani
www.dinamani.com