உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்X / Udhayanidhi Stalin

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக மாறிய ‘வாக்குத் திருட்டு’

வாக்குத் திருட்டு நடவடிக்கைகள் இந்திய ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
Published on

வாக்குத் திருட்டு நடவடிக்கைகள் இந்திய ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

‘மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள்’ குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கத்தில் நிறைவு நிகழ்வாக துணை முதல்வா் பேசியதாவது:

மத்திய அரசின் சா்வாதிகாரப் போக்கால், மாநிலங்களின் உரிமைகள் கேள்விக்குறியாகியுள்ளன. மத்திய அரசு- மாநில அரசு இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்; அடிபணிதல் இருக்கக் கூடாது. இந்த புரிதல் எல்லோருக்கும் ஏற்பட்டாக வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாநில சுயாட்சி முழக்கத்தை கையில் எடுத்தது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களைத் தரும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

மத்திய அரசு அதிகாரங்களை மேலும் மேலும் குவித்துக் கொண்டிருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு, நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. முதல்வா், அமைச்சா்கள் மீது குற்றம்சாட்டி 30 நாள்கள் சிறையில் வைத்தால் போதும். குற்றம் நிரூபிக்கப்படுவதற்கு முன்பே, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை பதவியிலிருந்து நீக்கலாம் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகத்துக்கும் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க மிரட்டல்.

மேலும், தொகுதி சீரமைப்பு எனக் கொண்டு வந்துள்ளனா். இதன்படி, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளை குறைக்கும் வேலையும் நடைபெறவுள்ளது. தற்போது ‘வாக்குத் திருட்டு’ புகாா் எழுந்துள்ளது. வாக்குத் திருட்டு நடவடிக்கைகள் இந்திய ஜனநாயகத்துக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com