
காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் குறித்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
”பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் 15-9-2022 அன்று மதுரையில் ஆதிமூலம் மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினைத் தொடங்கி வைத்து, மாணவக் குழந்தைகளுடன் அமர்ந்து, சாப்பிட்டு மகிழ்ந்தேன். பிள்ளைகளின் வயிறு நிறைந்தது. எனக்கு மனது நிறைந்தது.
காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளும் பயன்களும் எப்படி இருக்கின்றன என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வந்தேன். குழந்தைகளுக்கு என்ன வகையான ஊட்டச்சத்துகள் தேவை, அவர்கள் என்ன விதமான உணவை விரும்புகிறார்கள். சத்தும் ருசியும் கலந்த உணவு வழங்கப்படுகிறதா என்கிற ஆய்வுகளை மேற்கொண்டு, காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கூடியிருப்பதையும், தாய்மார்கள் தங்கள் பணிச்சுமை குறைந்த மகிழ்ச்சியுடன் பிள்ளைகளைத் தொடர்ச்சியாகப் பள்ளிக்கு அனுப்புவதையும் அறிந்துகொண்டேன்.
முதலமைச்சர் என்ற முறையில் மேற்கொள்ளும் பயணங்களின் போது, அங்குள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு நேரில் சென்று, உணவின் தரத்தையும் சுவையையும் பரிசோதித்ததுடன், பிள்ளைகளிடமும் அது பற்றி கேட்டறிந்தேன்.
ஆய்வின் வாயிலாக கிடைத்துள்ள தரவுகளின் படி, காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதும், குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாடு அடைந்து, நினைவாற்றலும் மேம்பாடு அடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பள்ளியில் காலை உணவு கிடைத்துவிடும் என்பதால் நிம்மதி அடைவதுடன் தங்களுடைய வேலைப் பளு குறைந்திருப்பதையும், பிள்ளைகளின் கற்றல் திறன் மேம்பட்டிருப்பதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.
உணவை அளித்து உயிரை வளர்க்கும் தமிழர் மரபில், குழந்தைகளுக்குக் காலை உணவு தந்து கல்வியை வளர்க்கும் முதன்மையான பணியை மேற்கொண்டிருக்கும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான நம்முடைய அரசு அடுத்தகட்டமாக காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யவிருக்கிறது. வருகிற 26-ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் மண்டலம் புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தினை பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் முன்னிலையில் தொடங்கி வைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போதெல்லாம் பள்ளிக் குழந்தைகளின் வயிறு நிறைகிறது. அவர்களின் அறிவு வளர்கிறது. பெற்றோரின் மனதில் மகிழ்ச்சிப் புன்னகை மலர்கிறது. தமிழ்நாடு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.