
கேரளத்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கும் அதனை அவர் ஏற்றுக்கொண்டதற்கும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டிலிருந்து, தமது சொந்த மாநிலத்திலிருந்து, ஹிந்து மதத்தில் நம்பிக்கை பூண்ட மக்கள் விடுக்கும் எந்தவொரு அழைப்புகளையும் அழைப்பிதழ்களையும் ஏற்றுக்கொள்ளாமல் தவிர்க்கும் அவர்(ஸ்டாலின்), கேரளத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏறுக்கொண்டுள்ளார். இது விமர்சனத்திற்குரிய விஷயமாகும்.
அவர்கள் தொடர்ந்து ஹிந்து உணர்வுகளை புண்படுத்தி வருகிறார்கள். அவரது மகன் பேசும்போது, சநாதன தர்மம் ஒரு நுண்கிருமி போன்றது; அதனை டெங்குவைப் போல கசக்கியெறிய வேண்டும் என்று பேசியிருந்தார்.
இன்னொருபுறம், தமிழ்நாட்டில் 35,000க்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கும்போது, ஸ்டாலின் எந்தவொரு கோயிலுக்கும் சென்றதேயில்லை.
கேரள முதல்வர் பினராயி விஜயன் ஸ்டாலினைக் குறித்து அறியாமல் இருக்கலாம், ஆனால், அவர்(ஸ்டாலின்) எப்படி அழைப்பிதழை ஏற்றுக்கொண்டார்?
ஸ்டாலின் ஒரு பெரியார்வாதி, அவரை அழைத்திருப்பதன் மூலம் ஐயப்ப பக்தர்களை அவர்கள்(கேரள அரசு) அவமதிக்கிறார்கள்.
அரசியலுக்காக எதையும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். இது பச்சோந்தித்தனமான போக்கு. ஹிந்து நம்பிக்கை கொண்டவர்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.