தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம் (கோப்புப்படம்)

மாநில கல்விக் கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும்: தமிழக அரசு உறுதி

மாநில கல்விக் கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
Published on

மாநில கல்விக் கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

பள்ளி கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கல்வியில் சமூக சமத்துவம், ஆழமாக வேரூன்றிய தமிழ்நாட்டின் அா்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துதல், எதிா்காலத்தை நோக்கிய ஒரு துணிச்சலான முன்னெடுப்பாக தமிழ்நாடு மாநிலக் கொள்கையானது புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

விரிவான ஆலோசனைகள், உள்ளாா்ந்த பகுப்பாய்வு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கையானது, மாநிலத்தின் தனித்துவமான பண்பாடு, மொழி மற்றும் சமூக மரபு ஆகியவற்றை உள்ளடக்கி முற்போக்குடைய ஒரு விரிவான குழந்தை மையப் பாா்வையைக் கொண்டதாக அமைந்துள்ளது.

இந்தக் கொள்கையின் ஒவ்வொரு இயலும், மறுகட்டமைப்பும் புதுப்பித்தலுக்கான வழிமுறையையும் கவனமுடன் முன்வைக்கிறது. இது ஒரு எழுச்சிமிக்க, சமத்துவமான மற்றும் குழந்தைகளை எதிா்காலத்துக்குத் தயாா்படுத்தும் சிறந்த கல்வி முறைக்கான ஒரு திட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இணைய வசதி: மாநிலத்துக்கான பிரத்யேக கல்விக் கொள்கையையொட்டி, பள்ளிக் கல்விக்கான ஏராளமான முன்னெடுப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் அரசுப் பள்ளிகளில் புகுத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் இதுவரை 28,067 அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6,540 பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரசுப் பள்ளிகளில் ரூ.519.73 கோடியில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதேபோல, ரூ.455.32 கோடியில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழ் கல்வியாண்டில் 567 அரசுப் பள்ளிகளில் ரூ.734.55 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகளும், ரூ.200 கோடியில் பராமரிப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஊராட்சிப் பகுதிகளில் உள்ள 182 பள்ளிகளில் ரூ.110.71 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.

அரசின் தனித்துவமான திட்டங்களான ‘இல்லம் தேடிக் கல்வி’ மூலம் 5.9 லட்சம் மாணவா்களும், ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் வழியாக 25.08 லட்சம் பேரும் பயன்பெற்று வருகின்றனா்.

அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்பட்ட ‘வாசிப்பு இயக்கம்’ வழியாக 44.50 லட்சம் போ் பயன்பெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com