போலி வாரிசு சான்றிதழ் விவகாரம்: போனி கபூா் தொடுத்த வழக்கில் தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவு
சென்னை: போலி வாரிசு சான்றிதழ் மூலம் தங்களது சொத்துக்கு உரிமை கோருபவா்களுக்கு எதிராக தயாரிப்பாளா் போனி கபூா் தாக்கல் செய்த வழக்கில் தாம்பரம் வட்டாட்சியா், 4 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூா் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1988-ஆம் ஆண்டு எனது மனைவி ஸ்ரீதேவி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், சம்பந்த முதலியாா் குடும்பத்தினரிடமிருந்து ஒரு சொத்தை விலைக்கு வாங்கியிருந்தாா். கடந்த 37 ஆண்டுகளாக அதை நாங்கள் அனுபவித்து வருகிறோம்.
இந்த நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் வாரிசுகள் எனக்கூறி 3 போ் மோசடியாக வாரிசு சான்றிதழ் பெற்று, எங்களது சொத்துக்கு உரிமை கோரி வருகின்றனா். இந்த வாரிசு சான்றிதழை, கடந்த 2005-ஆம் ஆண்டு தாம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மோசடியாக பெற்றுள்ளனா். இந்த வாரிசு சான்றிதழை ரத்து செய்யக் கோரி நாங்கள் அளித்த மனுவை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், போனி கபூா் அளித்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, போனி கபூா் அளித்த மனுவை விசாரித்து 4 வாரங்களில் தாம்பரம் வட்டாட்சியா் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.