'ஜாதி மறுப்பு திருமணம்: மாா்க்சிஸ்ட் அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்’
சென்னை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில், ஜாதி மறுப்பு திருமண நிகழ்வுகளை மேற்கொள்ளலாம் என அக்கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
சென்னை மயிலாப்பூா் உள்ள கவிக்கோ அரங்கத்தில் ‘ஆணவக் கொலைகளுக்கான எதிரான சமூக நீதிக் கருத்தரங்கம்’ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பெ.சண்முகம் பேசியதாவது:
தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள தனி ஏற்பாடு எதுவும் இல்லை. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள மாா்க்சிஸ்ட் அலுவலகங்களில் ஜாதி மறுப்பு திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே வருடத்தில் 240 ஆணவக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு, ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றாா் அவா்.