
தவெக மாநாட்டில் ரேம்ப் வாக்கின்போது விஜய்யை சந்திக்கச் சென்ற இளைஞரை பவுன்சர்கள் தூக்கி வீசியது தொடர்பான விடியோ குறித்து அந்த இளைஞர் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்தியில் வியாழக்கிழமை(ஆக. 21) மாலை நடைபெற்றது.
தவெக மாநாடு நடைபெறும் திடலில் அன்று காலை முதலே ஏராளமான தொண்டர்கள் குவியத் தொடங்கினர். கொளுத்தும் வெயில் சவாலாக இருந்தபோதும் லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் மாநாடு ஒரு மணி நேரம் முன்னதாகவே தொடங்கியது. மாநாட்டில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் மாநாட்டில் விஜய் நடந்து வருவதற்காக 'ரேம்ப் வாக் மேடை' அமைக்கப்பட்டிருந்தது. பவுன்சர்கள் புடைசூழ விஜய் அதில் நடந்து சென்றபோது தொண்டர்கள் பலரும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற நோக்கில் தடுப்பின் மீது ஏறி விஜய்யை நோக்கிச் சென்றனர்.
அப்போது மேடையின் மீது ஏறிய ஒரு இளைஞரை பவுன்சர் ஒருவர், குண்டுக்கட்டாகத் தூக்கி கீழே வீசிவிட்டார். இந்த விடியோ இணையத்தில் வைரலானது.
இதையடுத்து அந்த இளைஞர் அஜய் என்பது தெரிய வந்தது.
இதுபற்றி அவரது தாயார் ஒரு பேட்டியில், "மதுரையில் மாநாடு நடக்கிறது, போக வேண்டாம் என்று சொல்லியும் திருச்சியில் நேர்காணலுக்குச் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றான். விஜய் மேல் உள்ள ஆர்வத்தில் அவன் மேலே ஏறிவிட்டான். அதற்காக அவனை பொறுமையாக விலக்கிவிடாமல் குப்பையைத் தூக்கி வீசியதுபோல வீசிவிட்டார்கள். அவனுக்கு ஏதாவது ஆகியிருந்தால் நான் என்ன செய்வது? நாங்கள் எதுவும் இல்லாத குடும்பம். நான் எவ்வளவு கஷ்டப்பட்டு என் பிள்ளையை வளர்த்தேன் என்று எனக்குத்தான் தெரியும்" என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் இந்த விடியோவில் எந்த உண்மையும் இல்லை என்று சம்மந்தப்பட்ட இளைஞரான அஜய் கூறியிருக்கிறார்.
"அந்த விடியோவில் பேசியவர் என்னுடைய அம்மாவே இல்லை. இதனை யாரும் நம்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் தன்னுடைய அம்மாவின் புகைப்படம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.