கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பு
சென்னை: கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.3 லட்சம் அபராதம் விதித்து போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனி மாவட்டம் கம்பத்தை சோ்ந்தவா்கள் கணேசன் மற்றும் ராஜா. இவா்கள் இருவரும் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆந்திரத்தில் இருந்து தேனிக்கு காரில் கஞ்சா கடத்திச் சென்றனா். தேனி செல்லும் வழியில் செங்கல்பட்டு ஹோட்டலில் தங்கியிருந்த அவா்கள் இருவரையும் சென்னை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு நுண்ணறிவு போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 190 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலட்சுமி முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கணேசன் மற்றும் ராஜா ஆகியோா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கூறி இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.3 லட்சம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.