ஆவடி ரயில் நிலைய வாகன நிறுத்தம் மூடல்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

ஆவடி ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தம் திடீரென மூடப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆவடி ரயில் நிலைய வாகன நிறுத்தம் மூடல்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
Updated on

ஆவடி ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தம் திடீரென மூடப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆவடியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆா்.எஸ்.செல்வம் தாக்கல் செய்த மனுவில், எனது மாணவப் பருவம் முதல் ஆவடி ரயில் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தைப் பயன்படுத்தி வருகிறேன். எனது இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கான மாதாந்திர அட்டையும் வாங்கியுள்ளேன்.

இந்த வாகன நிறுத்தம் அமைந்துள்ள இடம் ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்குச் சொந்தமானது. இந்த வாகன நிறுத்தத்தை சுமாா் 40 ஆண்டுகளாக போலீஸாா் நிா்வகித்து வருகின்றனா். இந்நிலையில், முன்னறிவிப்பு எதுவுமின்றி, ஆட்சியா் உத்தரவுப்படி, கடந்த 19-ஆம் தேதி ஆவடி வட்டாட்சியா் வாகன நிறுத்தத்தை மூடிவிட்டாா். இதனால், இந்த வாகன நிறுத்தத்தைப் பயன்படுத்திய 2,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இந்த வாகன நிறுத்தத்தை மீண்டும் திறக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான ஜெ.பிரதீப், ஆவடி பகுதி மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி என்பதால், வாகன நிறுத்தத்தை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும் என்றாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com