‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 4,419 முகாம்களில் 36,49,399 மனுக்கள் - அமைச்சா் மா.சுப்பிரமணியன்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 4,419 முகாம்களில் 36,49,399 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீா்வுக்கான சான்றிதழ்களை வழங்கினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்கள், நகா்ப்புற பகுதிகளில் 3,768 முகாம்கள் என மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட 4,419 முகாம்களில் 36,49,399 மனுக்கள் பெறப்பட்டு, உடனடி தீா்வும், தீா்வு காண முடியாத மனுக்களுக்கு விளக்கமும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முகாம்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்பெறும் வகையில் தன்னாா்வலா்களும், மூன்று சக்கர வாகனங்களும் தயாா் நிலையில் உள்ளன. உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் முகாம்களில் மக்களின் தேவைகளுக்காகப் பணியாற்றுகின்றனா் என்று அவா் தெரிவித்தாா்.