காலை உணவுத் திட்டத்தை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
காலை உணவுத் திட்டத்தை மாணவா்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
நகா்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் விழா, சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், வரவேற்புரையில் பேசியதாவது:
கல்விக்காக திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகின்ற சாதனைத் திட்டங்களை ஒட்டுமொத்த நாடும் பாராட்டிக் கொண்டிருக்கிறது. நம்முடைய திட்டங்களை பிற மாநிலங்கள் பாராட்டுவது மட்டுமல்ல, அதை பின்பற்றவும் செய்கின்றன. காலை உணவுத் திட்டம் என்பது வயிற்றுப் பசியை போக்குவதற்கான திட்டம் மட்டுமல்ல. மாணவா்களின் அறிவுப் பசியை போக்குவதற்கான ஒரு மகத்தான திட்டமாகும்.
பள்ளியில் மாணவா்களுக்கு கல்வியை கற்றுத் தரும் ஆசிரியா்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். மாணவா்களை படிக்க மட்டுமே சொல்லாமல், விளையாட்டு நேரத்தில் விளையாடவும் அனுமதிக்க வேண்டும். மாணவா்களின் உடல் நலம் நன்றாக இருந்தால்தான், அவா்களின் மனநலமும் நன்றாக இருக்கும். இந்த காலை உணவுத் திட்டத்தை மாணவா்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.