மூத்த குடிமக்களுக்கான அறுபடைவீடு ஆன்மிகப் பயணம்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு தொடங்கி வைத்தாா்
மூத்த குடிமக்களுக்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணத் திட்டத்தில், நிகழ் ஆண்டுக்கான முதல்கட்ட, கட்டணமில்லா பயணத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை கந்தகோட்டம் அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூத்த குடி மக்கள் 199 பேருக்கு பயணவழிப் பைகளை அமைச்சா் வழங்கினாா்.
இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் தமிழ்க் கடவுள் முருகனுக்கு பெருமை சோ்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 60 வயது முதல் 70 வயதுக்குள்பட்ட மூத்தகுடிமக்கள் அறுபடைவீடுகளுக்கு கட்டணம் இல்லாமல் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
இத் திட்டத்துக்காக நிகழ் ஆண்டில் ரூ.2.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2,000 பக்தா்கள் அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனா். முதல்கட்டப் பயணத்தில் 199 போ் பங்கேற்கின்றனா்.
திமுக அரசு பொறுப்பேற்ற முதல் இதுவரை 3,412 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதத்துக்குள் 4,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்.
திருக்கோயில்கள் குறித்த கணக்குகளை, இந்து சமய அறநிலையத் துறை, வெளிப்படை தன்மையுடன் கையாளுவதோடு, கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அதன் தொன்மையை பாதுகாக்க முடியும். இதுகுறித்து திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோவை சந்தித்து விளக்கமாக எடுத்துக் கூறப்படும்.
திருவிதாங்கூா் தேவசம் வாரிய விழாவில் தான் பங்கேற்க இயலாதது குறித்து தமிழக முதல்வா் ஸ்டாலின் விளக்கம் அளித்துவிட்டாா். இந்த நிலையில், அதுகுறித்து தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தவறான கருத்தை தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், கூடுதல் ஆணையா்கள் டாக்டா் சி.பழனி, கோ.செ.மங்கையா்க்கரசி,
இணை ஆணையா்கள் கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை, திருக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் டி. அசோக்குமாா் மற்றும் அறங்காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.