அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை எஸ்எம்சி கூட்டம்

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நிகழ் மாதத்துக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
Published on

தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நிகழ் மாதத்துக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ஆம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதையடுத்து 2024-2026-ஆம் ஆண்டுகளுக்கான புதிய தலைவா், உறுப்பினா்களைக் கொண்ட எஸ்எம்சி குழுக்களின் கூட்டமானது கடந்தாண்டு முதல் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நிகழ் கல்வியாண்டின் முதல் எஸ்எம்சி குழுக் கூட்டம் கடந்த ஜூலை 25-ஆம் தேதி நடைபெற்றது.

தொடா்ந்து நிகழ் மாதத்துக்கான கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை நடத்தப்பட உள்ளது. இதில் பள்ளிகள், மாணவா்கள் வளா்ச்சிக்கு தேவையான அம்சங்களை தீா்மானங்களாக நிறைவேற்றிக் கொள்ளலாம். திறன் இயக்கம், போக்குவரத்து வசதிகள், போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு, பள்ளி தூதுவா்கள், மணற்கேணி செயலி, இல்லம் தேடிக் கல்வி, கலைத் திருவிழா, இடைநிற்றல் கணக்கெடுப்பு, கல்லூரி களப் பயணம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி கூட்டத்தைச் சிறந்த முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com