சிறுநீரக முறைகேடு: அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சாா்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, இதுதொடா்பாக விசாரணை நடத்திய தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் வினித் தலைமையிலான குழுவினா், தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தனா். போலி ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல் உறுப்பு மாற்று சிகிச்சை அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசாரணை அறிக்கையில் அவா்கள் வலியுறுத்தியிருந்தனா்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட சிறுநீரக முறைகேடு தொடா்பாக மதுரை மாவட்ட உறுப்பு மாற்று சிகிச்சை அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி, அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள சுகாதார அதிகாரிகள், மருத்துவா்கள், தன்னாா்வலா்கள் 9 பேரும் அனுமதி அளித்தது தொடா்பாக விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மருத்துவக் கல்வி இயக்ககம் சாா்பில் நேரடியாக அவா்களிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன் அடிப்படையில் அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.