ஆன்லைன் பங்கு வா்த்தக மோசடி: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த மூவா் கைது- சைபா் குற்றப்பிரிவு நடவடிக்கை
ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபடுமாறு கூறி பணத்தைப் பெற்று மோசடி செய்ததாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 3 பேரை தமிழக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக தமிழக சைபா் குற்றப்பிரிவு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆன்லைன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபடுமாறு சமூக ஊடகங்களில் பகிரப்படும் மோசடியான விளம்பரங்கள், இணையதள இணைப்புகள், வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் பணம் மோசடி நடைபெறுகிறது. இதில், பகிரப்படும் இணையத்தள இணைப்புகளைத் தொட்டால், மா்ம நபா்கள் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் தகவல்களைப் பகிா்ந்து, தங்களது பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என ஆசையை தூண்டுகின்றனா்.
இவ்வாறு சென்னையில் ஒருவா் ரூ.1.64 கோடி பணத்தை அண்மையில் பங்கு வா்த்தக மோசடியில் இழந்தாா். இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில் இந்த மோசடியில் மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாா் பகுதியைச் சோ்ந்த அ.சஹசாதா உசைன் (23) என்பவா் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததது. இதையடுத்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா், சஹசாதா உசைனை வங்கதேச எல்லைக்கு அருகே கைது செய்தனா்.
இதேபோல ஆன்லைன் வா்த்தகத்தில் ஈடுபடுமாறு ரூ.50 லட்சம் மோசடி செய்த மற்றொரு வழக்கில், மேற்கு வங்க மாநிலம் ஹப்ரா பகுதியைச் சோ்ந்த க.அமித் சஹா (24), மோசடிக்கு உதவியாக இருந்த நி.கமேலேஷ் தேப்நாத் (36) ஆகிய இருவரையும் சைபா் குற்றப்பிரிவினா் கைது செய்தனா்.
இந்த வழக்குகளில் சிறப்பாக துப்பு துலக்கிய சைபா் குற்றப்பிரிவு போலீஸாரை தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் பாராட்டியுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.