சென்னை வானிலை மையம்
சென்னை வானிலை மையம்din

கோவை, நீலகிரிக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை: வானிலை மையம்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஆக.28) முதல் செப்.2 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.

இதில் குறிப்பாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக.28,29) நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஆக.28-இல் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பம் அதிகரிக்கும்: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஆக.28) அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

புயல்சின்னம் வலுப்பெற்றது: ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்) புதன்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது வியாழக்கிழமை (ஆக.28) மேற்கு-வடமேற்கு திசையில் ஒடிஸாவை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஆக.28 முதல் ஆக.31 வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com