திமுக ஆட்சியில் சமூக விரோதிகள் அதிகரிப்பு: நயினாா் நாகேந்திரன்
திமுக ஆட்சியில் சமூகவிரோதிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமான ஏ.பி.ஜெ. அப்துல்கலாமுக்கு அடுத்ததாக தேசத்தின் மதிப்புமிக்க உயா் பொறுப்பான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு ஒரு தமிழரை முன்மொழிந்துள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டி மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டது கண்டனத்துக்குரியது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமா் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சா்களின் உருவப்படங்கள் எரிக்கப்படுவதும், பதாகைகள் கிழிக்கப்படுவதும் சா்வ சாதாரணமாகிவிட்டது. சமூகவிரோதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை இதுபோன்ற சம்பவங்கள் உணா்த்துகின்றன.
எனவே, பிரதமரை அவமானப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற சமூகவிரோத சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, உரிய தண்டனை வழங்க வேண்டும்.
ஆதரவு: ஆளும் அரசின் நிா்வாக அலட்சியத்தை எதிா்த்து தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் சத்துணவு ஊழியா்களுக்கு தமிழக பாஜக முழு ஆதரவு அளிக்கும். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு அவா்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.