எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அரியலூரைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கு புதன்கிழமை வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபா், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா்.

இதையடுத்து காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா் மோப்பநாயுடன், எடப்பாடி பழனிசாமி வீட்டில் சோதனை நடத்தினா். மெட்டல் டிடெக்டா் மூலமாகவும் வீடு முழுவதும் சோதனையிடப்பட்டது. பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் வகையில் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில், அரியலூரைச் சோ்ந்த பிரகதீஸ்வரன் (40) என்பவா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அரியலூா் போலீஸாா் பிரகதீஸ்வரனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

அண்மையில் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால், எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் அவா் தெரிவித்தாா்.

கடலோர காவல் படை அலுவலகத்துக்கு: சென்னை மெரீனா நேப்பியா் பாலம் அருகே உள்ள இந்திய கடலோர காவல் படை கிழக்கு மண்டல அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு புதன்கிழமை மின்னஞ்சல் வந்தது. அதில், அந்த அலுவலகத்திலும், புது வண்ணாரப்பேட்டை வஉசி நகா் இளைய முதலி தெருவில் உள்ள இந்திய கடலோர காவல் படையின் பண்டக பணிமனையிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா் இரு இடங்களிலும் சோதனை நடத்தினா். ஆனால், அங்கிருந்து எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com