தீ ஆணையத் தலைவராக முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவாலை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் இன்றுடன் பணி ஓய்வுபெறும் நிலையில், புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமை இயக்குநர் பதவியிலிருந்து ஓய்வுபெறும் சங்கர் ஜிவாலுக்கு புதிய பதவி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய காவல் துறையின் தலைமை இயக்குநா் நியமனம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமன், அடுத்த டிஜிபியாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் காவல்துறை வீட்டு வசதி நிறுவன டிஜிபி சைலேஷ்குமாரின் பணிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவு பெறவிருக்கிறது. இன்றுதான் கடைசி பணி நாள் என்பதால் இன்று மாலை எழும்பூர் ராஜரத்தினம் வளாகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.
முன்னதாக, பணி ஓய்வுபெறும் டிஜிபி சங்கர் ஜிவால், இன்று காலை மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
சங்கா் ஜிவால் உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா். பொறியாளரான இவா், ஐபிஎஸ் தோ்வில் தோ்ச்சி பெற்று, கடந்த 1990-ஆம் ஆண்டு தமிழக காவல்துறை பணியில் சோ்ந்தவர். மன்னாா்குடி உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியைத் தொடங்கிய சங்கா் ஜிவால் டிஜிபியாக பணி ஓய்வு பெறுகிறார்.
சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், திருச்சி மாநகர காவல் ஆணையா், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநா், உளவுப் பிரிவு டிஐஜி, ஐ.ஜி., சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி, ஆயுதப்படை ஏடிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையா் என பல்வேறு பதவிகளை வகித்தவர். இவா் 2 முறை குடியரசுத் தலைவா் பதக்கம் பெற்றுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.