
சிவகங்கை: திருப்புவனம் அருகில் வைகை ஆற்றங்கரை பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடர்பான 6 நகல் மனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி விளக்கம் கொடுத்திருக்கிறார்.
வைகை ஆற்றங்கரையில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் வீசப்பட்டிருப்பதாக தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில், சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகில் வைகை ஆற்றங்கரை பகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடர்பான மனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதனடிப்படையில், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், ”உங்களுடன் ஸ்டாலின்” முகாம் தொடர்பாக அப்பகுதியில் பெறப்பட்ட மனுக்களில் பட்டா மாறுதல் வேண்டி அளிக்கப்பட்ட மனுக்கள் மீது, உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்ட 6 மனுக்களின் நகல்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக பெறப்பட்ட 7 மனுக்களின் நகல்கள் ஆகியவைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட மனுக்களின் நகல்கள் வெளிவந்தது தொடர்பாக கடந்த இரண்டு தினங்கள் திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர்களிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவை தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியரின் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. அரசிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இதுபோன்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளோர் மீது, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.