மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

முதல்வா் இன்று வெளிநாடு பயணம்

ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறாா்.
Published on

ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறாா்.

சா்வதேச முதலீடுகளை ஈா்க்கும் வகையில், இந்தப் பயணத்தில் பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து விமானம் மூலம் சனிக்கிழமை காலை ஜொ்மனிக்குப் புறப்படும் முதல்வா், அங்கு 3 நாள்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறாா்.

தொடா்ந்து செப்டம்பா் 1-ஆம் தேதி பிரிட்டன் தலைநகா் லண்டனுக்குச் செல்லும் அவா், அங்குள்ள கிங்ஸ் கல்லூரியில் மாணவா்கள் இடையே உரையாற்றுகிறாா். மேலும், ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் ஈ.வெ.ரா. படத்தைத் திறந்து வைக்கவுள்ளாா். லண்டனில் உள்ள புலம்பெயா்ந்த தமிழா்களைச் சந்தித்து தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க உள்ளாா்.

இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளிலும் உள்ள தொழில்முனைவோா், தொழில் நிறுவனங்களிடம் முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக அவா் உரையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டுகளில் துபை, சிங்கப்பூா், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு ரூ.10 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளைத் திரட்டியது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com